கேரளா குண்டு வெடிப்பு – மத வெறுப்பை தூண்டியதாக மத்திய அமைச்சர் மீது வழக்கு பதிவு!
கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மதவெறியை தூண்டியதாக மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்ச்சை கருத்து
கேரள மாநிலம் களமசேரியில் கடந்த 29ம் தேதி நடந்த கிறித்துவ மத வழிபாட்டு கூட்டத்தில் 3 முறை தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 12 வயது சிறுமி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 35 பேருக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் கேரளா மாநிலத்தையே உலுக்கியது. உடனே, போலீசார், தீவிரவாத ஒழிப்பு படையினர் மற்றும் என்ஐ அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கினர். இதற்கிடையில், டொமினிக் மார்ட்டின் என்பவர் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று போலீசில் சரணடைந்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில் மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழில் நுட்ப இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தனது எக்ஸ் பக்கத்தில் மத ரீதியாக குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
அதில் “காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் சமாதான அரசியலின் விலையை, சமூகத்தின் அப்பாவி மக்களே சுமக்க வேண்டியுள்ளது. வரலாறு அதைதான் நமக்கு கற்று கொடுத்திருக்கிறது. காங்கிரஸ், இடதுசாரிகள் உள்பட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் பயங்கரவாத அமைப்பான ஹமாஸுக்கு ஆதரவாக, வெறுப்பை பரப்பவும், கேரளத்தில் ஜிகாத் அமைக்கவும் அழைக்கின்றன. பொறுப்பற்ற முட்டாள்தனமான அரசியல்” என பதிவிட்டார்.
வழக்கு பதிவு
மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயன் தீவிரவாதிகளிடம் சகிப்புத்தன்மை கொண்டவர் என்று குற்றம் சாட்டினார். அதுமட்டுமல்லாமல் “நான் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றியும் பேசவில்லை. நான் குறிப்பாக ‘ஹமாஸ்’ என்று குறிப்பிட்டேன்.
பினராயி விஜயன் ஹமாஸை சமூகத்துடன் சமன்படுத்த விரும்புவது போலத்தான் இருக்கிறது” என்று மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கூறினார். இந்நிலையில் ராஜீவ் சந்திரசேகரனின் சர்ச்சைக்குரிய எக்ஸ் பதிவு தொடர்பாக கொச்சி மத்திய காவல்நிலைய போலிசார் அவர் மீது IPC 153 a (சாதி ,மதம்,மொழி,சமயம் ரீதியாக விரோத உணர்ச்சியை தூண்டுதல் ) மற்றும் பிரிவு 120 (o) (பொது ஒழுங்கை சீர்குலைத்தல் மற்றும் மீறுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் கருத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.