பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை சேவை யாழ்ப்பாணத்துக்கு இல்லை!
பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை சேவை யாழ்ப்பாணத்துக்கு இல்லை!
நாடளாவிய ரீதியில் பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை சேவைகளுக்கு ஊடாக காணிப் பதிவு, உறுதி, புத்தகப் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்ற போதிலும் யாழ்ப்பாண மாவட்ட காணிப் பதிவகத்தின் ஊடாக நிகழ்நிலை சேவைகளைப் பெற முடியாது என்று மாவட்ட காணிப் பதிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பதிவாளர் திணைக்களத்தின் இணையத் தளத்தின் ஊடாகத் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பலருக்கு நீண்ட காலமாகப் பதிலேதும் கிடைக்காத நிலையில், பதிவாளர் நாயக அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு வினவிய போது, நாடளாவிய ரீதியில் – நாட்டிலுள்ள சகல காணிப் பதிவகங்களின் ஊடாகவும் நிகழ்நிலை சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். நிகழ் நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அந்தந்தக் காணிப் பதிவகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், யாழ்ப்பாணத்தில் உள்ள காணிப் பதிவகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அதன் தொலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டுள்ளது.
பதிவாளர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தொலைபேசியுடன் தொடர்பு கொண்டு வினவிய போது, யாழ்ப்பாணத்தில் அத்தகைய சேவைகள் எதையும் நிகழ்நிலை ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியாது எனவும், தேவையாயின் நேரில் வருமாறும் காணிப் பதிவகத்தின் பிரதம எழுதுவினைஞர் தெரிவித்துள்ளார். நேரத்தையும், மனித வலுவையும் மாதப்படுத்தும் வகையில் அரசாங்கம் பல வழிகளில் நிகழ்நிலையூடாக இலகுபடுத்தல்களை ஆரம்பித்துள்ள போதிலும், அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் தொழில்நுட்ட அனுகூலங்களை அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பதிவாளர் நாயகத்துக்கு முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.