சட்டவிரோத மணல் அகழ்வு – பொலிஸாருக்கு துணையாக இராணுவம் , எஸ்.ரி.எப் களமிறங்குவார்கள்
சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கு பொலீஸாருக்கு துணையாக ராணுவமும், விசேட அதிரடிப் படையினரும் களத்தில் இறங்குவார்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அகழ்வு இடம் பெற்று வருவதால் அது பல பாதிப்புகள் ஏற்படுத்துகின்றது,
அந்த வகையில் அதை கட்டுப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கில் படையினர், போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் கதைத்து முடிவொன்று எடுக்கப்பட்டு செயற்படுத்தி வருகின்ற அதேவளை மக்களுக்கு இலகுவாகவும், நியாயமான விலையிலும் மணல் கிடைக்க கூடிய வகையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
தற்போது சட்டவிரோத மணல் அகழ்வை பொலிஸார் கட்டுப்படுத்தி வருகின்றனர். தேவை ஏற்படின் அவர்களுக்கு துணையாக இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினரையும் களம் இறக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.