விடுதலைப் புலிகளின் தலைவர் படத்தை பத்திரிகையில் பிரசுரித்தமைக்காக விசாரணை
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் புகைப்படத்தை வெளியிட்டமை தொடர்பில் பத்திரிகையின் ஆசிரியரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து, இன்றைய தினம் புதன்கிழமை வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்துடன் , உதயன் பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியாகி இருந்தது.
அது தொடர்பில் விசாரணைக்காக பத்திரிகையின் செய்தி ஆசிரியர் கு.டிலீப் அமுதனை சுமார் மூன்றாண்டுகளின் பின்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் , கொழும்பில் உள்ள தமது தலைமை அலுவலகத்திற்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு தலைமை அலுவலகத்தில் செய்தி ஆசிரியரிடம் காலை 09 மணிக்கு விசாரணைகளை ஆரம்பித்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மதியம் 1.30 மணி வரையிலான சுமார் 4.30 மணி நேரம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.
அதேவேளை புலிகளின் தலைவரின் புகைப்படத்தை பிரசுரத்தமைக்காக 2020ஆம் நவம்பர் மாத இறுதியில் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ உதயன் பத்திரிகை ஆசிரியரான டிலீப் அமுதன் உள்ளிட்டவர்களுக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் டிலீப் அமுதன் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் வழக்கில் இருந்து நீக்கப்பட்டு, அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இருந்த போதிலும் குறித்த வழக்கு நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.