நீட் விலக்கே இலக்கு…அதிமுகவையும் சந்திப்பேன்!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!
நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்திற்காக அதிமுகவையும் சந்திப்பேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்
தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. முதல்வர் முக ஸ்டாலின் துவங்கிவைத்த இத்திட்டத்தில், திமுகவினரும், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கையெழுத்திட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் இன்று இந்த இயக்கத்திற்கு ஆதரவை பெற தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை நேரில் சந்தித்து ஆதரவை பெற்றார்.
நீட் விலக்கே இலக்கு
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய போதும் ஆளுநர் கையெழுத்து போடாமல் வைத்திருந்தார். தற்போது ஜனாதிபதியின் கையெழுத்துக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம் என்று கூறி, 6 ஆண்டுகளில் நீட் தேர்வு காரணமாக 22 குழந்தைகள் இறந்துள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டினார்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்பதை உண்மையாக்க அதற்கான நடவடிக்கைக்களை எடுத்து வருகிறோம் என குறிப்பிட்டு, 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெற்று திமுக இளைஞரணி மாநாட்டில் தலைவரிடம் ஒப்படைத்த பிறகு குடியரசுத்தலைவரிடம் இந்த கையெழுத்துக்களை அனுப்புவதுதான் எங்களின் இலக்கு என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், www.BanNeet.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை 3 லட்சம் கையெழுத்துக்களை பெற்றுள்ளோம் என்று கூறி, போட் கார்டுகள் மூலம் இதுவரை 8 லட்சம் கையெழுத்துக்களை பெற்றுள்ளோம் என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளிடம் கையெழுத்து பெறுவதற்காக வந்துள்ளேன் என தெரிவித்தார்.
அதிமுகவையும் சந்திப்பேன்
மேலும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து கையெழுத்து வாங்க உள்ளேன் என தகவல் அளித்த உதயநிதி ஸ்டாலின், அனைத்து இயக்க தலைவர்களையும் சந்தித்து நீட் தேர்வுக்கு கையெழுத்திட வேண்டும் என கேட்க உள்ளேன் என்றார்.
அப்போது செய்தியாளர், அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, ஆம் அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்து நீட் விலக்குக்கு கையெழுத்து பெற திட்டமிட்டுள்ளேன் என கூறி உள்ளார்.