ஆசிய நாடொன்றை மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
நேபாளத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 128 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும்
நேபாள அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, உள்ளூர் மக்கள் இடிந்து விழுந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களின் இடிபாடுகளில் உயிர் பிழைத்தவர்களை தேடி வருகின்றனர். நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
சேதம் அடைந்த வீடுகளின் எண்ணிக்கையும் அதிகம் என்றே கூறப்படுகிறது. மேலும், உயிர் பிழைத்தவர்கள் பயத்தில் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். நேபாளத்தில் இருந்து 500 கி.மீ தொலைவில் அமைந்துள்ள டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ருக்கும் மேற்கில் குறைந்தது 36 பேரும், ஜாஜர்கோட்டில் 34 பேரும் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 9,000 பேர்கள் பலி
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பயங்கரமான உயிர் சேதம் மற்றும் கடுமையான உள்கட்டமைப்பு சேதங்களுக்கு நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் நடுக்கத்தையும் இரங்கலையும் பதிவு செய்துள்ளார்.
நேபாளத்தில் கடந்த 2015ல் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 9,000 பேர்கள் பலியாகினர். 22,000 க்கும் அதிகமானோர் காயங்களுடன் தப்பினர்,
500,000 க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின, மேலும் கிட்டத்தட்ட 8,000 பாடசாலைகள் சேதமடைந்தது. இதனால், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் குழந்தைகளுக்கு வகுப்பறைகள் இல்லாத நிலை ஏற்பட்டது என கூறப்படுகிறது.