;
Athirady Tamil News

இந்தியா கூட்டணி வெற்றி பெறும்போது நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவோம் – அமைச்சர் அன்பில் மகேஷ்!

0

இந்தியா என்ற கூட்டணி வெற்றி பெறும்போது கண்டிப்பாக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் .

அன்பில் மகேஷ்
புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு போதிய அலுவலர்கள் பணியில் உள்ளார்களா, அலுவலர்களின் தேவைகள் என்னென்ன, நடைபெறும் பணிகள் முறையாக நடைபெறுகிறதா, நிலுவையில் உள்ள கோப்புகள் என்னென்ன உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்பில் மகேஷ் “தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியா என்ற கூட்டணி வெற்றி பெறும்போது கண்டிப்பாக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணி வெற்றி பெறும் வரை நீட் தேர்வு எதிர்க்கொள்ளும் மாணவர்களை கைவிடாமல் இருக்க அவர்களுக்கு தேவையான பயிற்சியும், ஒருபுறம் சட்ட போராட்டமும் நடத்திக் கொண்டிருக்கின்றோம். இன்று மாநில உரிமைகளை ஒன்றிய அரசு பறித்துக் கொண்டிருக்கிறது.

வாக்குறுதி நிறைவேற்றப்படும்
அதற்கு மிகப்பெரிய பதிலடியை வருகின்ற நாடாளுமன்றத்தில் மக்கள் வழங்குவார்கள். ஏற்கனவே நீட் தேர்வாள் 22 மாணவர்களின் உயிரை நாம் இழந்து உள்ளோம். ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது நான் நேரடியாக சந்தித்து மூன்று மாத காலம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். வருகின்ற நவம்பர் எட்டாம் தேதி அவர்களை அழைத்து குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. ஆசிரியர் சங்கத்திற்கும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கும் எந்த ஒரு முரண்பாடும் கிடையாது நாங்கள் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளோம்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற நினைக்கும் போது நிதி தொடர்பான பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் பொறுத்திருங்கள் என்று கூறுகின்றோம். கடந்த 10 ஆண்டு காலம் பொறுத்திருந்தீர்கள், அதனால் பொறுமையாக இருங்கள். நிதி சுமை தீரும்போது கண்டிப்பாக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும்” என்று பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.