;
Athirady Tamil News

தாவணியுடன் தப்பியோடிய திருடன் ; புத்தளம் பகுதியில் பதிவான சம்பவம்

0

புத்தளம் – பாலாவி முல்லை ஸ்கீம் கிராமத்தில் வீடொன்றினுள் நுழைந்த திருடன் வீட்டினுள் உறங்கியதுடன் வீட்டிலிருந்த தாவணி அணிந்தவாறு தப்பியோடிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது முல்லை ஸ்கீம் பகுதியில் இன்று (04.11.2023) காலை வேளையில் 35 வயது மதிக்கத்தக்க திருடன் ஒருவன் நடமாடிய நிலையில் அப் பகுதியில் பொலிஸாரின் வாகனமொன்று வருவதைக் கண்டு கிராமத்திலுள்ள வீடொன்றினுள் நுழைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

வீட்டினுள் நுழைந்த திருடன்
குறித்த வீட்டிற்குள் அந்த வேளை யாருமே இருக்காத நிலையில் வீட்டின் சமையலறை ஊடாக நுழைந்த குறித்த திருடன் குப்பி விளக்கொன்றினை ஏற்றி வெளிச்சத்தை வரவைத்துள்ளதுடன் வீட்டிலிருந்த நுளம்பு வலையை எடுத்து தூங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

அந்த வீட்டில் இருந்த துணிகளை எடுத்து தலையணைக்காகவும் பயன்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் திருடன் தங்கியிருந்த வீட்டில் சத்தம் ஒன்று கேட்டபோது, யாருமில்லாத வீட்டிலிருந்து சத்தம் வருவதை அயலிலுள்ளவர்கள் அவதானித்துள்ளனர்.

இது தொடர்பில் வீட்டின் உரிமையாளருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கியுள்ளதுடன், ஏனையோருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

தப்பியோடிய திருடன்
இதனை அவதானித்த திருடன் தான் அணிந்து வந்த ஆடைகளை கழற்றிவிட்டு வீட்டிலிருந்த பெண்கள் அணியும் தாவணி ஒன்றை உடுத்திய நிலையிலேயே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இவ்வாறு தாவணி உடுத்திய நிலையில் தப்பிச் செல்லும் காட்சிகள் அந்தக் கிராமத்தின் சில வீடுகளில் பொருத்தப்பட்ட சிசிரிவி கமராக்களில் பதிவாகியுள்ளன.

குறித்த சம்பவத்தை கேள்விப்பட்ட முல்லை ஸ்கீம் இளைஞர்களும் ஊர்மக்களும் ஒன்று சேர்ந்து தப்பியோடிய குறித்த திருடனை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பெண்கள் அணியும் தாவணியோடு தப்பியோடியதாக கூறப்படும் குறித்த திருடன், அந்த கிராமத்தின் பற்றைக்குள் பதுங்கியிருந்த நிலையில் ஊர் மக்களால் பிடக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
குறித்த திருடன் பல திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர் என்றும், நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.