பிரதமர் நெதன்யாகு வீட்டின் முன் குவிந்த இஸ்ரேலிய மக்களால் பரபரப்பு: வலுக்கும் எதிர்ப்பு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை பொலிசார் தடுத்து நிறுத்தினர்.
தோல்வியே காரணம்
காஸா பகுதியைச் சுற்றியுள்ள சமூகங்கள் மீது ஹமாஸ் ஆயுததாரிகள் கடந்த மாதம் நடத்திய கொடூர தாக்குதலுக்கு நெதன்யாகு அரசாங்கத்தின் தோல்வியே காரணம் என மக்கள் நம்புவதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலிய கொடியுடன் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள், எங்களை சிறையில் தள்ளுங்கள் என முழக்கமிட்டுள்ளனர். ஜெருசலேமில் உள்ள நெதன்யாகுவின் இல்லத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் தடைகளை மீறி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்புகளின்படி இஸ்ரேலியர்களில் முக்கால்வாசிக்கும் அதிகமானோர் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று விரும்புகின்றனர்.
மேலும், அக்டோபர் 7 ம் திகதி நூற்றுக்கணக்கான ஹமாஸ் ஆயுததாரிகள் தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதலை முன்னெடுக்க அனுமதித்த தோல்விகளுக்கான தனிப்பட்ட பொறுப்பை நெதன்யாகு இதுவரை ஏற்கவில்லை என்றே கூறப்படுகிறது.
இதுவே மக்களின் பரவலான கோபத்தை தூண்டியுள்ளது. மட்டுமின்றி, காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளின் குடும்பங்கள் அரசாங்கத்தின் இதுவரையான நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து தங்கள் உறவினர்களை மீட்டு அழைத்து வருமாறு அழைப்பு விடுத்தனர்.
அரசியல் ஆதாயத்திற்காக
மேலும் டெல் அவிவ் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கானோர், பணயக்கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என ஆர்ப்பாட்டம் செய்தனர். அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் ஹமாஸ் படைகளுக்கு பதிலடி அளிக்கும் வகையில் இஸ்ரேல் கொடூர தாக்குதலஒ முன்னெடுத்து வருகிறது.
இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 9,000 கடந்துள்ளது. ஹமாஸ் மீதான போருக்கு முன்னரே நெதன்யாகு தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்த்துப் போராடும் இக்கட்டான நிலையில் இருந்தார்.
மட்டுமின்றி நீதித்துறையின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை முன்வைத்து தப்பிக்க முயற்சிகள் மேற்கொண்டார். இது பல ஆயிரக்கணக்கான மக்களை வீதியில் இறங்கி போராட வைத்தது.
தற்போது ஹமாஸ் மீதான போரை தனது அரசியல் ஆதாயத்திற்காக அமெரிக்காவின் ஆதரவுடன் முன்னெடுத்து வருகிறார் என இஸ்ரேல் மக்கள் நம்புகின்றனர்.