எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதில்லை: லாஃப்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு
எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதில்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் நிறைவேற்று குழு அதிகாரி நிரோஷன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதம் நடைமுறையில் இருந்த விலையிலேயே நவம்பர் மாதமும் எரிவாயுவை விற்பனை செய்வதற்கு லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புடன் ஒப்பிடும் போது இம்மாதம் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டியிருந்தாலும், நடைமுறையில் இருக்கும் விலையிலேயே இம்மாதம் தொடர்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிரோஷன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், 12.5 கிலோ கிராம் எடைகொண்ட எரிவாயு சிலிண்டரை 3,985 ரூபாவிற்கும், 5 கிலோ கிராம் எடைகொண்ட எரிவாயு சிலிண்டரை 1,595 ரூபாவிற்கும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயு
இந்நிலையில், கடந்த (4 )ம் திகதி நள்ளிரவு லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், 2024 பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் எரிவாயு விலை தொடர்ந்தும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
“குளிர் காலநிலை காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிக்கலாம் “என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், அதன் பின்னர் எரிவாயுவின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவும் சுட்டிகாட்டியுள்ளார்.
கடந்த(4)ம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயுவின் விலைக்கமைய, 12 கிலோ கிராம் எடைகொண்ட சிலிண்டரின் 3,565 ரூபாவாகவும் 05 கிலோகிராம் விலை 1,431 ரூபாவாகவும், 02 கிலோகிராம் எடைகொண்ட சிலிண்டரின் விலை 668 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.