சனாதன விவகாரம்..உதயநிதி மீது நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்!! உயர் நீதிமன்றம் வருத்தம்!!
சனாதன விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உதயநிதி பேச்சு
சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என பேசியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் பலரும் வலியுறுத்தி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தான், கிஷோர் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிபதி வருத்தம்
இந்நிலையில், திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் திராவிட கொள்கைகளுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்னை உயர்மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், தமிழக அமைச்சர்கள் சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசியதன் விளைவாக தான், இப்பொது திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
பொது நிகழ்ச்சிகளில் அதிகாரத்தில் உள்ளவர்கள் பேசும்போது சாதி, மதம், கொள்கை ரீதியாக எந்தவித பிளவும் மக்களுக்குள் ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதி, அமைச்சர்கள் குறிப்பிட்ட ஒரு கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதிலாக மது உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்பதில் கவனம் செலுத்தலாம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, எந்த மதத்திற்கு எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் அனுமதிக்காது என்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டது காவல்துறையின் தங்களுடைய கடமையை புறக்கணித்து போன்றது என்றும் இரண்டு அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என தெரிவித்து, மகேஷ் கார்த்திகேயன் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.