இலங்கை கிரிக்கெட் நிறுவன விவகாரம்: அமைச்சரவை எடுத்த தீர்மானம்
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் எதிர்கால விவகாரங்கள் மற்றும் அதற்கான வர்த்தமானி தொடர்பில் ஆராய உபகுழுவொன்று நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய இடைக்கால கிரிக்கெட் குழு தொடர்பில் இன்று(06) பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், விளையாட்டுத்துறை அமைச்சரினால் இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டமை தொடர்பில் அதிபர் அறிந்திருக்கவில்லை எனவும், புதிய இடைக்கால குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பில் அதிபர் அறிந்திருக்கவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம்
அத்தோடு, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் மூலம் அதிபர் இதனை அறிந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரவியவந்துள்ளன.
அதேவேளை, இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை தொடர்பு கொண்டு விசாரிக்க அதிபர் பல தடவைகள் முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
புதிய குழு நியமனம்
இந்நிலையில், புதிய இடைக்கால கிரிக்கெட் குழு தொடர்பில் இன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் அதிபர் செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால விவகாரங்கள் மற்றும் அது தொடர்பான வர்த்தமானி தொடர்பில் ஆராய குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான இந்த குழுவில் அமைச்சர்களான டிரான் அலஸ், மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.