விரைவில் தமிழரசு கட்சியின் மாநாடு – மாவை சேனாதிராஜா
தமிழரசுக் கட்சியின் மாநாடானது ஜனவரி மாதம் நடாத்தப்படவுள்ளதாக கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியா புகையிரதநிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று(05.10.2023) இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செயற்குழுக் கூட்டம்
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“வவுனியாவிலே இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திலே கட்சியின் மாநாடு தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மாநாட்டினை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், திருகோணமலையில் நடாத்துவது தொடர்பாக ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சி அமைப்பு வேலைகள் யாவும் மாநாட்டிற்கு முன்னர் இடம்பெறவுள்ளது, குறிப்பாக மத்தியகுழு, பொதுக்குழு, மாநாட்டிற்கான மற்றும் மத்தியகுழுவுக்கான பிரதிநிதிகள் தலைவர், செயலாளர் தெரிவுகள் என்பன பொதுக்குழு கூடி தெரிவு செய்யப்பட்ட பின்னர் 2024 ஜனவரி மூன்றாவது வாரத்தில் மாநாட்டினை நாடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எமது இன விடுதலை, காணி விடுவிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், பௌத்த சிங்கள ஆதிக்கத்தினை தமிழ் மக்களின் பிரதேசங்களிலே நிலைநாட்டும் செயற்பாடுகளுக்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் எமது மாநாட்டு தீர்மானத்திலும், அதற்கு முன்னரும் தொடர்ச்சியான போராட்டங்களை நடாத்துவது பற்றியும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
விரைவில் செயற்குழு கூடி இப்போராட்டங்களை அமைதியாக, ஜனநாயக ரீதியாக நடாத்துவது தொடர்பான நடைமுறைகளை தீர்மானிப்போம்” என தெரிவித்துள்ளார்.