மீண்டும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள்
இலங்கையில் நாளை (08) முதல் டெங்கு ஒழிப்புப் பணிகளில் இருந்து விலகி தொழிற்சங்கப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நாளை முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வழங்கும் சகல அறிக்கைகளும் இடைநிறுத்தப்படுவதுடன் முன்னேற்ற மீளாய்வு உள்ளிட்ட சகல கூட்டங்களிலும் பங்கேற்பதும் இடைநிறுத்தப்படும் எனவும் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்தும் 22 ஆம் திகதி அனைத்து தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இருந்தும் விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
எரிபொருள் விலை அதிகரிப்பு
அத்துடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் சகல களப்பணிகளில் இருந்தும் விலகி பதினைந்தாம் திகதி முதல் மாகாணங்களில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தவுள்ளதாகவும், அன்றைய தினம் சுகாதார அமைச்சுக்கு முன்பாக பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பயணச் செலவு அதிகரிப்பு என்ற தலைப்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த மாதம் 10 ஆம் திகதி சுகாதார அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேலும், தமது பிரச்சினைகள் தொடர்பாக 25ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்திற்கு சாதகமான தீர்வுகள் வழங்கப்படவில்லை என்றும் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி பணியிட விவரம் மற்றும் கடைசி நாளில் தொழிற்சங்க நடவடிக்கையை அறிவிக்கும் கடிதத்தின் அடிப்படையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும் தெரிவித்தார்.