தாக்குதலுக்கு உள்ளான 9 வயது மாணவன் வைத்தியசாலையில்: ஆசிரியை கைது
ஒன்பது வயது சிறுவன் பாடசாலை ஆசிரியையால் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவனின் பெற்றோர்கள் கல்வி அதிகாரிகளிடமும், பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்திருந்த நிலையில், இன்றைய தினம் (08.10.2023) ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட மாணவன் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் (06.11.2023) ஆங்கில பாட ஆசிரியை ஒருவர் மாணவனை தடியினால் அடித்து தாக்கியமை தொடர்பில் மாணவனின் பெற்றோர் பொகவந்தலாவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மாணவனின் பெற்றோர் கல்வி அமைச்சு, மத்திய மாகாண ஆளுநர், மத்திய மாகாண கல்வி திணைக்களம் மற்றும் ஹட்டன் கல்வி வலய கல்விப் பணிமனை ஆகியவற்றில் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஆங்கில ஆசிரியை கற்பித்தலில் ஈடுபட்டிருந்த போது வகுப்பறையில் மாணவன் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததால் ஆசிரியை ஆத்திரமடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை
இலங்கையும் அங்கீகரித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் அடிப்படையில், பாடசாலையில் ஒழுக்கத்தை பேணுவதில் உடல் ரீதியான தண்டனையிலிருந்து விலகியிருக்க வேண்டுமென்பதோடு, சிறுவர்களின் மனித மாண்பைப் பாதுகாக்கும் வகையில் பாடசாலை ஒழுக்க நிர்வாகத்தை நடத்துவதற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த வருடம் கல்வி அமைச்சிடம் வலியுறுத்தியிருந்தது.
கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடசாலையில் ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்கான 12/16 சுற்றறிக்கையை ஆசிரியர்களின் ஓய்வறைகளில் காட்சிப்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
சிறுவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு மாறாக செயற்படும் பாடசாலை முறைமைக்கு எதிராக பாரிய சமூக எதிர்ப்பு எழுந்துள்ளமை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினும் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைய, சிறுவர் இம்சை மற்றும் அடிப்படை உரிமை மீறல்களின் கீழ் மாணவர்களை தண்டிக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும்.