சிறிலங்கா கிரிக்கெட் சபையின் குழப்பம் : பின்னணியில் இந்தியாவாம்
சிறிலங்கா கிரிக்கெட் சபையின் குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னையின் தலைவரும் சுயாதீன எதிரணியின் உறுப்பினருமான விமல் வீரவன்ச சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இன்று(9) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகார சபையின் தலைவர் உட்பட நிர்வாக சபையை நீக்குதல் மற்றும் புதிய சட்ட கட்டமைப்பை சட்டமூலம் ஊடாக அனுமதிக்கும் பிரேரணை மீதான விவாதத்தின் போது உரையாற்றிய போது தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் உரையாற்றிய அவர், “எமது கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு வேண்டிய வசதிகளை பெற்றுக்கொடுப்பற்கு போதிய நிதியில்லை என்று குறிப்பிடப்படுகிறது.
ஆனால் கிரிக்கெட் சபையின் ஆலோசகராக தெரிவு செய்யப்பட்ட மஹேல ஜயவர்தனவுக்கு மாதம் 27 ஆயிரம் டொலர் சம்பளம் வழங்கப்படுகிறது.
ஐ.சி.சி தலைவரின் கோரிக்கை
ஐ.சி.சி.யின் தலைவர்தான் எல்.பி.எல். போட்டியை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இடம்பெற சிறிது காலத்திற்கு முன்பாக நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் சபைக்கு பணித்தாரோ தெரியவில்லை.
ஏனெனில், ஐ.சி.சி.யின் தலைவர் தனியார் விமானத்தில் வருகைத் தந்து, அதிபர் மற்றும் அதிபரின் பிரதானி சாகல ரத்னாயக்கவை சந்தித்துள்ளார்.
இதன்போது இலங்கை கிரிக்கெட் சபைக்கு உள்ள அநாவசிய அழுத்தங்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் அதிபரிடம் கோரியுள்ளார் என எமக்கு தெரியவந்துள்ளது” – என்றார்.