யாழில் வீதியில் நெல் விதைத்து விவசாயிகளால் நூதன முறையில் போராட்டம்!
யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதான வீதியின் மூளாய் பகுதியில் வீதியினை இடைமறித்து வீதியில் நெல் விதைத்து நூதனமான முறையில் பிரதேசவாசிகள் இன்று (10.11.2023) காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக வீதி அபிவிருத்திகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் வீதி புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாது வெள்ள நீர் தேங்கி நிற்பதால் இப்பிரதேச பொதுமக்கள் அதிகளவில் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதனால், பொன்னாலை மற்றும் மூளாய் பகுதியினை சேர்ந்த விவசாயிகள், சிறுவர்கள், பொதுமக்கள் இணைந்து காரைநகர் மானிப்பாய் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உழவு இயந்திரம் மற்றும் மாட்டு வண்டிலை கொண்டு இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் எழுப்பிய கோஷம்
இதன்பொழுது வெள்ளத்தினால் நீந்தியா செல்வது?, ரணில் அரசாங்கமே எங்கள் மீது ஏன் இந்த பாரபட்சம்?, வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளே உங்களுக்கு கண் இல்லையா?, சைக்கிள் உடைகிறது சட்டை சேறாகிறது, நடந்து சென்றால் கால்கள் புண் ஆகிறது, அரச அதிகாரிகளே எங்களையும் பாருங்கள், வழக்கம்பரை முதல் பொன்னாலைவரை வாழும் மக்கள் மந்தைகளா? ஆகிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக வீதியில் குளம் போல சேதமடைந்து காணப்பட்டட பகுதியில் ஏர் கலப்பை பூட்டி கற்பூரம் கொழுத்தி தேங்காய் உடைத்து தேவாரம் பாடி ஏர் உழுவது போல ஆற்றுகை செய்து நெல் மணிகளை வீதியில் விதைத்துள்ளனர்.
தொடர்ச்சியாக உழவு இயந்திரங்களாலும் வீதி உழுவது போன்று ஆற்றுகை செய்து போராட்டகாரர்களால் நெல் விதைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கருத்து
பாடசாலை மாணவர்கள், வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், சிறுவர்கள், வாகன ஓட்டுனர்கள் என பலரும் இதனால் தமது அன்றாட வாழ்வியலை அச்சத்திற்குள்ளாக கடக்கின்றார்கள். விபத்துக்களும் பதிவாகியுள்ளன.
இதனை கருத்திற்கொண்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வெகுவிரைவில் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
இல்லையெனில் நிச்சயமாக இவ்வீதிகளை விவசாய நிலங்களாக மாற்றுவோம் என தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக சுமார் ஒரு மணித்தியலமாக குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
போராட்டத்தில் மூளாய் பொன்னாலை பகுதி சிறுவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.