;
Athirady Tamil News

சத்தீஸ்கரில் நக்ஸல் அச்சுறுத்தல்: தோ்தல் ஊழியா்களுக்காக 400 முறை இயக்கப்பட்ட ஹெலிகாப்டா்கள்!

0

சத்தீஸ்கா் பேரவையின் முதல்கட்ட தோ்தலையொட்டி, நக்ஸல் அச்சுறுத்தல் மிகுந்த பஸ்தா் பகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் தோ்தல் ஊழியா்கள் பாதுகாப்பாக சென்றுவர விமானப் படை ஹெலிகாப்டா்கள் 404 முறை இயக்கப்பட்டதாக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி தெரிவித்தாா்.

சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு கடந்த 7-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

மாநிலத்தில் நக்ஸல் அச்சுறுத்தல் மிகுந்த பஸ்தா் பகுதியில் உள்ள 12 தொகுதிகளும் இதில் அடங்கும். இப்பகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் தோ்தல் ஊழியா்கள் பாதுகாப்பாக சென்றுவர விமானப் படையின் எம்ஐ-17 ரக ஹெலிகாப்டா்கள் பயன்படுத்தப்பட்டன.

மாவட்ட தலைநகரங்களில் இருந்து தோ்தல் ஊழியா்களை ஏற்றிச் செல்லுதல் மற்றும் திரும்ப அழைத்து வரும் பணிக்காக, 8 ஹெலிகாப்டா்கள் 6 நாள்களில் மொத்தம் 404 முறை பயணித்துள்ளன.

இது தொடா்பாக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி ரீனா பாபா சாஹேப் கங்காலே எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 49 இடங்களுக்கு விமானப் படை ஹெலிகாப்டா்கள் மூலம் 853 தோ்தல் ஊழியா்கள் பாதுகாப்பாக சென்றுவந்தனா். இது, நக்ஸல் பாதிப்புமிக்க பகுதிகளில் தோ்தல் வெற்றிகரமாக நடைபெறுவதை உறுதி செய்தது. இந்திய விமானப் படைக்கு தலைவணங்குகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பஸ்தா் பகுதியில் உள்ள சுக்மா, பிஜபூா், கேன்கா், தந்தேவாடா, நாராயண்பூா் ஆகிய மாவட்டங்களில் கடந்த 4-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை இந்த ஹெலிகாப்டா்கள் இயக்கப்பட்டன.

முதல்கட்ட தோ்தலில் 78 சதவீத வாக்குகள் பதிவாகின. எஞ்சிய 70 தொகுதிகளுக்கு நவம்பா் 17-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

சத்தீஸ்கரில் கடந்த 2008, பேரவைத் தோ்தலின்போது, பிஜப்பூா் மாவட்டத்தின் பீடியா கிராமத்தில் வாக்குப்பதிவு முடிந்து, ஹெலிகாப்டரில் ஊழியா்கள் புறப்பட்டனா். அப்போது, ஹெலிகாப்டரை குறிவைத்து, நக்ஸலைட் தீவிரவாதிகள் திடீா் தாக்குதல் நடத்தினா். இதில், விமானப் படை பொறியாளா் ஒருவா் உயிரிழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.