அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையம் தொடர்பில் ஆராய்வு(video)
அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையம் தொடர்பில் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யூ.டீ.வீரசிங்க ஆராய்ந்துள்ளார்.
அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ அழைப்பின் பேரில் இன்று அப்பகுதிக்கு விஜயம் செய்த அவர் குறித்த மறுசுழற்சி நிலையம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்தார்.
இதன் போது பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம, உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், முப்படை அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தகர்கள் , அரச உத்தியோகத்தர்கள் ,எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது அப்பகுதியில் மலைபோல் குவிந்துள்ள குறித்த குப்பைகளை யானைகள் தினமும் உண்ண வருகின்ற நிலை ,இவ்வாறு வரும் யானைகள் சில அருகில் உள்ள பொதுமக்களின் சொத்துக்களுக்கும் சேதங்களை விளைவிப்பதனால் ஏற்படும் நிலைமை, இதனை கட்டுப்படுத்த யானை வேலிகள் அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை ஆராயப்பட்டதுடன் இது தவிர நகர சபையின் திண்மக்கழிவகற்றல் முகாமுத்துவத்தை மேம்படுத்துவதற்கான பொறிமுறைத் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் திண்மக்கழிவு கொட்டும் இடத்தில் ஒரு நிறுவனம் இயற்கை பசளை தயாரிப்பதற்காக அங்கு பொருத்தப்பட்டுள்ள பாரிய இயந்திரத்தின் மூலம் உரத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலைமை குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.
இலங்கையின் பெருமளவான காட்டு யானைகள் குப்பை மேடுகளை தேடி உணவுக்காக வருகின்றன. தாவர உண்ணியான காட்டு யானைகள், குப்பைகள் ,பொலீத்தீன்கள், பிளாஸ்ரிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவு பொருட்களை உட்கொள்வதனால் யானைகளின் இறப்பு வீதம் அதிகரித்து வருகின்றது. யானை நாளொன்றுக்கு சுமார் 150 கிலோ உணவை உட்கொள்வதாகவும் 160 லீட்டர் தண்ணீரையும் குடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை நகரில் இருந்து குப்பைகள் வாகனங்கள் மூலம் தினமும் கொண்டுவரப்பட்டு கொட்டப்படுகின்றதுடன் மலைபோல் குவிந்துள்ள குறித்த குப்பைகளை யானைகள் தினமும் உண்ண வருகின்றமை குறிப்பிடத்தக்கது.