யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி வரலாற்றில் தமிழ்மொழியில் நடந்தேறிய முதல் கல்வியியலில் செயல்நிலை ஆய்வு மாநாடு
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி கல்வி அமைச்சின் ஆய்வு அபிவிருத்திப் பிரிவுடன் இணைந்து நடாத்துகின்ற கல்வியியலில் செயல்நிலை ஆய்வு மாநாடானது நேற்று திங்கட்கிழமை (13) யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
கல்வியியற் கல்லூரி வரலாற்றில் முதல் முதலாக தமிழ்மொழி மூலம் நடைபெற்ற கல்வியியலில் செயல்நிலை ஆய்வு மாநாடு இதுவாகும்.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆய்வு அபிவிருத்திப் பிரிவினால் முன்னெடுக்கப்படும் இச்செயல்நிலை ஆய்வு மாநாடானது ஏனைய கல்வியியற் கல்லூரிகளுக்கு முன்னுதாரணமான செயற்பாடாகும்.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி உருவாக்கப்பட்டு இரண்டு தசாப்த காலத்தின் பின்னர் முதல் முதலாக இக்கல்வியியலில் செயல்நிலை ஆய்வு மாநாடு இடம்பெறுகிறது. கல்வியியல் பல்கலைக்கழகத்தை நோக்கிச் செல்லும் இக்காலகட்டத்தில் ஆசிரியர்களை ஆய்வாளராக்கும் முயற்சியாகவும் ஆசிரியர்களது உயர்கல்வி மற்றும் வாண்மைத்துவ விருத்திக்கு வழிகாட்டியாகவும் இம்மாநாடு அமைவது சாலப் பொருத்தமானதாகும்.
எதிர்காலத்தில் ஆசிரியர்களை ஆய்வாளராக்கும் புது முயற்சியாக கல்வித்துறை சார்ந்து முன்னெடுக்கப்படும் இந்த செயல்நிலை ஆய்வு மாநாடு தமிழ்மொழி மூல கல்விப்புலம் சார் புலமையாளர்களின் பங்களிப்புடன் நடைபெறுகிறது.
இந்த ஆய்வு மாநாட்டின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பா.தனபாலன் வழங்கினார்.
வரவேற்புரையை சிரேஷ்ட விரிவுரையாளர் இராமநாதர் சத்தியேந்திரம்பிள்ளை ஆற்றியதுடன், வாழ்த்துரையை யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி சுப்பிரமணியம் பரமானந்தம் நிகழ்த்தினார்.
இந்த ஆய்வு மாநாட்டுக்கு பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மங்களேஸ்வரன் கலந்துகொண்டதுடன், முதன்மைப் பேச்சாளராக திறந்த பல்கலைக்கழக ஓய்வுநிலை கல்வி பீட பேராசிரியர் மேனாள் பீடாதிபதி சசிகலா குகமூர்த்தி உரையாற்றினார்.
முதன்மைப் பேச்சாளர் அறிமுக உரையை கல்லூரியின் உப பீடாதிபதி ‘நிதியும் நிர்வாகமும்’ திருநானந்தம் ஜெயகாண்டீபன் ஆற்றினார்.
நன்றியுரையை ஆய்வு மாநாட்டு மலராசிரியரும் மாநாட்டு பிரதம ஒழுங்கமைப்பாளரும் விரிவுரையாளருமான பரராஜசிங்கம் இராஜேஸ்வரன் வழங்கினார்.
இந்த ஆய்வு அமர்வு ஒழுங்கமைப்பாளர்களாக சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி சந்திரிகா நாகேந்திரன், கலாநிதி சின்னத்தம்பி பத்மராஜா பணியாற்றினார்கள்.
இம்மாநாட்டின் இருக்கை விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியற்துறைத் தலைவர் கலாநிதி ஜெயலட்சுமி இராசநாயகம் மற்றும் கல்வியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஆனந்தமயில் நித்திலவர்ணன் மற்றும் திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ராஜினி சுப்பிரமணியசர்மா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
செயல்நிலை ஆய்வு மாநாட்டில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் பயிற்சியைப் பூர்த்தி செய்த ஆசிரிய மாணவர்களாகிய ஸ்ரீதரன் வித்தகி, நுகு லெபி சாஜிதா மரியம், ரவீந்திரகுமார் டல்சாலினி, டினா திவ்வியமலர் கிறிஸ்டி தவசீலன், காயத்திரி மகேந்திரன், தவராசா நிசாந்தினி, எம்.எஸ்.பாத்திமா சுமைகா, மகாலிங்கம் டர்சிகன், குணசேகரம் கஸ்தூரி, சண்முகநாதன் தேகசுகன் ஆகிய 10 பேர் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தனர்.
மேலும் வருகை தந்த விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.