தினேஷ் ஷாஃப்டரின் ஆயுள் காப்புறுதி மீதான உத்தரவு தளர்வு
பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாஃப்டரின் சார்பாக அவரின் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய ஆயுள் காப்புறுதி பலன்களை ஒரு வாரத்துக்கு இடைநிறுத்துமாறு இரண்டு காப்புறுதி நிறுவனங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவு நீதிமன்றத்தால் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த தரப்பினருக்கான காப்புறுதிக் கொடுப்பனவை நிறுத்த வேண்டிய தேவைப்பாடு தொடர்ந்தும் இல்லையென கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்ரா ஜயசூரிய நேற்று (15) அறிவித்துள்ளார்.
அத்துடன் நட்ட ஈட்டைப் பெற்றுக்கொள்ள சில தரப்பினர் முயற்சிப்பது குறித்து எந்தவித ஆதாரங்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் நீதவான் அறிவித்துள்ளார்.
காவல்துறை கோரியது
தினேஷ் ஷாஃப்டரின் மரணம் குற்றச்செயல் என உறுதியாகியுள்ள நிலையில் அவரின் சார்பாக அவருடைய தரப்பினருக்கு காப்புறுதி நட்டஈடு வழங்கப்படுவதை ஒரு வார காலத்திற்கு கைவிடுவதற்கான உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு அண்மைய வழக்கு விசாரணையின் போது காவல்துறை நீதிமன்றத்தைக் கோரியிருந்தது.
ஜனசக்தி குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் தினேஷ் ஷாஃப்டர், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பொரளை பொது மயானத்துக்கு அருகில் தமது மகிழுந்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார்.
பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.