இலங்கையில் ஆபத்தான இருவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமாவை காலி நகர மையத்தில் வைத்து சுட்டுக் கொன்ற சுஜீ கொஸ்கொடவின் உதவியாளர்கள் இருவரும் இரகசியமாக வெளிநாடு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டி. வி. சானக்கவின் மாமனாரை கொன்ற பின்னர் கொஸ்கொட சுஜி துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரையும் டுபாய் நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
காலி நகரின் பிரபல வர்த்தகரான 60 வயதான லலித் வசந்த, இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கொலைச் சம்பவம்
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், காலி பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்த போதிலும், சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
விசாரணைகளின் போது, கொல்லப்பட்ட லலித் வசந்த, ரத்கம விதுர என்ற பாதாள உலகத் தலைவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணமெனவும் தெரியவந்துள்ளது.
காலி நகரில் உள்ள தனது ஆடை கடையில் பணியை முடித்துக் கொண்டு காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் லலித் வசந்தவை டி56 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.