புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு நற்செய்தி : கொடுப்பனவு அதிகரிக்கப்படலாம்
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே கல்வி அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவினை அதிகரிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும கல்வி அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
அத்துடன், புலமைப் பரிசில் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்தநிலையில், குறித்த கோரிக்கை தொடர்பில் பதிலளித்த கல்வி அமைச்சர், இம்முறை கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டை சேமித்து இதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.
புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ், மாணவர்களுக்கு அழுத்தங்கள் ஏற்படாத வகையில், புலமைப்பரிசில் பரீட்சையை இலகுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.