;
Athirady Tamil News

கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இரகசிய சந்திப்பில் 25 எம்.பிக்கள்!

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து பாரிய கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா இரகசியமாக ஈடுபட்டு வருகிறார்.

புதிய கூட்டணிக்கான அலுவலகம் கூட சமீபத்தில் இராஜகிரியவில் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதேவேளை, புதிய கூட்டணியில் இணைந்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்வரும் தேர்தலில் ஒன்றிணைந்து பாரிய அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டுமென்ற தொனியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவின் நகர்வுகள் உள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன உட்பட பல்வேறு கட்சிகளுடன் நிமல் லான்சா தலைமையிலான குழு பரந்தப்பட்ட பேச்சுகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், கூட்டணி குறித்து இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான முக்கிய சந்திப்பு ஒன்று கடந்த புதன்கிழமை கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றுள்ளது.

இது மிகவும் ரகசியமாக திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள கூட்டமாக உள்ளதுடன், கூட்டத்தில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் கூட அருகில் இருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

புதிய கூட்டணிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ள அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இக் கூட்டத்தில் பேசப்பட்ட எதையும் பகிரங்கப்படுத்த வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் தமது பணிகளை தொடங்க கூட்டணியின் உறுப்பினர்கள் முடிவுகளை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

இதற்கிடையில், புதிய கூட்டணியின் அரசியல் குழு சமீபத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடியுள்ளது.

இந்த இரகசிய சந்திப்பில் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நிமல் சிறிபாடி சில்வா, நளின் பெர்னாண்டோ, லசந்த அழகியவன்ன, ஜகத் புஷ்பகுமார, அநுர பியதர்ஷன யாப்பா, நிமல் லான்சா, பிரியங்கர ஜயரத்ன மற்றும் கட்சி அலுவலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினரும் கலந்துகொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.