யாழில் உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞனுக்கு பிணை
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞனை கடந்த 08ஆம் திகதி விசாரணைக்காக வட்டுக்கோட்டை பொலிஸார் அழைத்த போது, தனது நண்பனுடன் பொலிஸ் நிலையம் சென்ற இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும், வழக்கம்பரை பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற களவு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை, அவர்களை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் அலெக்ஸ் எனும் இளைஞன் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இளைஞனின் உயிரிழப்பை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில், உடலில் சித்தரவதை காயங்கள் காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
அதேவேளை பொலிஸார் தன்னை எவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள் என உயிரிழந்த இளைஞன், உயிரிழக்க ஒரிரு நாட்களுக்கு முன்னர் பேசிய காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உயிரிழந்த இளைஞன் , இளைஞனின் நண்பன் மீதான களவு குற்றசாட்டு தொடர்பிலான வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விளக்கமறியலில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த இளைஞனின் நண்பர் முற்படுத்தப்பட்ட போது, அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றில் செய்த சமர்ப்பணங்களை அடுத்து, இளைஞனை பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.