ஒரே பாலின தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை! இருவரும் கருவை சுமந்த அதிசயம்
ஸ்பெயினைச் சேர்ந்த ஒரே பாலின ஜோடிகள், தங்களது வாரிசை இருவர் உடலிலும் சுமந்து பெற்றுள்ளனர்.
ஒரே பாலின ஜோடிகள்
ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளவும், மருத்துவத்தின் உதவியோடு குழந்தைகளை பெற்றுக்கொள்ளவும் ஐரோப்பிய சட்டங்கள் அனுமதிக்கின்றன. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரே பாலின ஜோடிகள் எஸ்டெபானியா(30) – அசஹாரா(27).
இவர்கள், தங்களுக்கான வாரிசை இருவருமே சுமந்து பிரசவிக்க வேண்டும் என நினைத்தனர். பொதுவாக, இதுபோன்ற ஒரே பாலின சேர்க்கையில், இருவரில் ஏதேனும் ஒருவர் மட்டும் வாரிசை உருவாக்குவதில் பங்கேற்க முடியும்.
ஆனால், இந்த ஜோடிகள் இருவருமே தங்களது உடலில் வாரிசை சுமக்க விரும்பினர். இவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு இன்வோசெல் (INVOcell) என்ற நவீன செயற்கை கருத்தரிப்பு உத்தியை மருத்துவர்கள் பயன்படுத்தினர். அதாவது, ஒரு பெண்ணின் கருமுட்டை மூலம் உருவாகும் கருவானது இன்னொருவர் வயிற்றில் சிசுவாக வளரும்.
அதன்படி, முதலில் எஸ்டெபானியாவின் உடலுக்குள் முட்டை மற்றும் விந்தணுக்களின் காப்ஸ்யூல் சேர்க்கப்பட்டது. பின்பு, ஆரோக்கியமான கருக்கள் தேர்வு செய்யபட்டது. இந்த கருவில் ஒன்றை எடுத்து அசாஹாராவின் கருப்பையில் பொருத்தப்பட்டது.
பிறந்தது குழந்தை
இதனைத்தொடர்ந்து ஒக்டோபர் 30 -ம் திகதி ஸ்டெபானியா – அசஹாரா ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இருவருமே தாய்மையை பகிர்ந்து கொண்டு பிறந்த குழந்தைக்கு டெரெக் எலோய் என்ற பெயர் வைத்தனர்.
மருந்து செலவினங்களை சேர்க்காமல் சிகிச்சை பெறுவதற்கு இந்திய மதிப்பில் சுமார் நான்கரை லட்சம் செலவாகியுள்ளது. இவர்கள், இருவரும் தம்பதிகளாக சேர்ந்து வாழ்ந்து, வாரிசை உருவாக்கி தங்களது மகப்பேற்றை கொண்டாடி வருகின்றனர்.
மேலும், ஐரோப்பாவின் குழந்தை பெற்றவர்களில் முதல் ஓரினச்சேர்க்கை ஜோடியாகவும், உலகில் இரண்டாவது ஓரினத் தம்பதியாகவும் உள்ளனர்.