சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து கண்டுபிடிப்பு; கைது செய்யப்பட்டுள்ள இறக்குமதியாளர்
கல்சியம் காபனேட் எனக் கூறி சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து மீட்கப்பட்டுள்ளது.
198 பிளாஸ்டிக் பீப்பாய்களில் அடைக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட குறித்த உழுந்தை ரூ. 279,704 மாத்திரம் செலுத்தி சுங்கத்திலிருந்து விடுவிக்க முயன்ற நிலையில் அவை கைப்பற்றப்பட்டுள்ளன.
சுங்க சோதனையின் போது, குறித்த பிளாஸ்டிக் பீப்பாய்களில் வெள்ளை தூளுக்கு அடியில் பொதியிடப்பட்டு சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 9,600 கிலோ கிராம் உளுந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெள்ளைத் துகளை அடையாளம் காண தேவையான பணிகளை இலங்கை சுங்கத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இறக்குமதியாளர்
அங்கொட பிரதேசத்தில் வசிக்கும் இறக்குமதியாளர் ஒருவரினால் இந்த 198 பிளாஸ்டிக் பீப்பாய்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
குறித்த இறக்குமதியாளர் தற்போது இலங்கை சுங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ASYCUDA கணனி தொகுதியின், இடர் முகாமைத்துவ மென்பொருளின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.
சுங்க அபாய கணனித் தொகுதி
இலங்கை சுங்கத்திற்கு அறிவிக்கப்பட்ட பொருட்களின் விபரம் மற்றும் பொருட்களை இறக்குமதி செய்த நாடு போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, சுங்க அபாய கணனித் தொகுதியானது தானாகவே இதனை கண்டறிவதை தீர்மானிக்கிறது.
வழக்கமான சோதனை மாத்திரம் செய்திருந்தால், மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 1 கோடியே 90 இலட்சம் (ரூ. 19,000,000) பெறுமதியான பாரிய உளுந்து தொகையானது சந்தைக்கு வெளியிடப்பட்டிருக்கும் என்பதோடு, அரசாங்கத்திற்கு ரூ. 28 இலட்சத்து 50 ஆயிரம் வரியும் இழக்கப்பட்டிருக்கும் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுங்க கட்டளைச் சட்டத்தின் விதிகளை மீறி மேற்கொள்ளப்பட்ட இந்த உழுந்தானது, அரசுடமையாக்கப்பட்டுள்ளதோடு, இந்த இறக்குமதி தொடர்பான மேலதிக விசாரணைகள் இலங்கை சுங்கத்தின் வருமான கண்காணிப்பு பிரிவின் நடமாடும் கிளை மேற்கொண்டுள்ளது.