‘சேரி மொழி’ சர்ச்சை: நடிகை குஷ்பு வெளியில் நடமாட முடியாது – காங்கிரஸ் எச்சரிக்கை..!
சேரி மொழி விவகாரம் மன்னிப்பு கேட்காவிட்டால் நடிகை குஷ்பு மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பட்டியல் அணி தலைவர் (sc wing) ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு
அண்மையில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து கொச்சையாக பேசியது பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ஒருவருக்கு பதிலளித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக நிர்வாகியுமான நடிகை குஷ்பு “திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள்.
அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது இது தான். சாரி, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேசமுடியாது என்று பதிவிட்டார். அவரின் அந்த பதிவில் ‘சேரி மொழி’ என பயன்படுத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
பெண்களை இழிவுபடுத்தும் மோசமான வார்த்தைகளுக்கு சேரி மொழி என முத்திரை குத்துகிறார் குஷ்பு. இதற்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என கடும் எதிர்வினைகள் எழுந்து வருகின்றன.
மன்னிப்பு கேட்க வேண்டும்
இந்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவுனில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பட்டியல் அணி தலைவர் ரஞ்சன் குமார் “விஷமத் தனமான பேச்சுக்கு குஷ்பூ பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
நாளை மாலை 5 மணிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவரது வீடு முற்றுகையிடப்படும். தமிழகத்தில் எங்கும் நடமாட முடியாது. பட்டியல் சமூகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் குஷ்பு ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு எதிராக மகளிர் ஆணைய உறுப்பினர் குரல் கொடுக்காதது ஏன்?
பாஜக என்ற சாக்கடையில் சேர்ந்ததால் தான், குஷ்பு இதுபோல ஜாதி, தத்தை வைத்து விஷமத்தனமாக பேசுகிறார். காங்கிரசில் அவரை கண்ணியமாக நடத்தினோம், பெருமைக்குரிய நபராக வைத்திருந்தோம். ஆனால் பாஜக என்ற சாக்கடையில் சேர்ந்துவிட்டார்.மன்னிப்பு கேட்காவிட்டால் குஷ்பு மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.