இறந்தவர்களின் சொத்துக்கள் மூலம் ரகசியமாக வருமானம் பார்க்கும் மன்னர் சார்லஸ்: கசிந்த தகவலால் வெளியான உண்மை
ஏராளம் சொத்துக்கள் வைத்திருக்கும் செல்வந்தர்கள் இறந்துபோனால், அவர்கள் சொத்துக்கள் என்ன ஆகும்? அவர்களுடைய வாரிசுகளுக்குப் போகும் இல்லையா? ஆனால், அவர்களுக்கு வாரிசு இல்லையென்றால்?
இறந்தவர்களின் சொத்துக்கள்
பிரித்தானியாவின், சில குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் செல்வந்தர்கள் இறந்தபிறகு, அவர்களுக்கு வாரிசு யாரும் இல்லையென்றால், அவர்களுடைய சொத்துக்கள் நாட்டை ஆள்பவரைச் சென்றடைந்துவிடுமாம்.
அதாவது, இதற்கு முன்பு எலிசபெத் மகாராணியாரையும், இப்போது மன்னர் சார்லசையும், அவருக்குப் பின்பு, இளவரசர் வில்லியமையும் என அடுத்தடுத்து ஆட்சி பீடத்தில் அமர்பவர்களைச் சென்றடைந்துவிடுமாம் அந்த சொத்துக்கள்.
அவ்வகையில், உயிரிழந்த ஆயிரக்கணக்கானோரின் சொத்துக்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் மன்னர் சார்லசுக்கு சுமார் 60 மில்லியன் பவுண்டுகள் வருமானமாக கிடைத்துள்ளதாக, சமீபத்தில் லீக்கான சில ஆவணங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
உரிமையாளர் இல்லாத சொத்துக்கள்
இப்படி உரிமையாளர் இல்லாத, வாரிசு இல்லாத சொத்துக்கள், bona vacantia என அழைக்கப்படுகின்றன. அந்த லத்தீன் வார்த்தையின் பொருள், காலி பொருட்கள் என்பதாகும்.
இப்படிப்பட்ட உரிமையாளர் இல்லாத சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய், தொண்டு நிறுவனங்களுக்கு செல்லவேண்டுமாம். ஆனால், உண்மையில், அந்த வருவாயில் ஒரு சிறிய தொகை மட்டுமே தொண்டு நிறுவனங்களுக்குச் செல்வதாகவும், மீதமுள்ள பெரும் தொகை மன்னருக்குச் செல்வதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த பணத்தை என்ன செய்கிறார் மன்னர்?
மன்னர் சார்லஸ் பதவியேற்றதும், பக்கிங்காம் மாளிகையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், அதனால் அவர் கிளாரன்ஸ் இல்லத்தில் கமீலாவுடன் தங்கப்போவதாகவும் செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.
அப்போது, பக்கிங்காம் மாளிகையை பழுதுபார்ப்பதற்காக செலவிடப்பட இருக்கும் தொகை, 369 மில்லியன் பவுண்டுகள் என்னும் செய்தியும் வெளியானது.
இப்படி மன்னருடைய மாளிகைகளை புதுப்பிக்க, பராமரிப்புப் பணிகள் செய்ய பணம் எங்கிருந்து வருகிறது? இப்படி உரிமையாளர்கள் இல்லாத சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருவாய்தான், இப்படி மன்னருடய மாளிகை முதலான கட்டிடங்களின் பராமரிப்புப் பணிக்காக செலவிடப்படுகிறதாம்.
அப்படியானால், மன்னருக்கு அந்த செலவு மிச்சம்தானே?
ஆக, இப்படி மரணமடைந்த ஆயிரக்கணக்கானோரின் சொத்துக்கள் மூலம் மன்னர் பயனடைய, அப்படி இறந்தவர்களின் நண்பர்கள் சிலர், ஏராளமானோர் வீடில்லாமல் தெருக்களிலும், அரசு இல்லங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்க, தங்கள் நண்பர்களின் பணம் மூலம் மன்னருக்கு லாபம் கிடைப்பது, அருவருப்பானதும், அதிர்ச்சியளிக்கக்கூடியதும், நியாயமற்றதுமான செயல் என்று கூறியுள்ளார்கள்.