மண்ணெண்ணெய், டீசலுக்கு வரி விலக்கு
வற் வரி அதிகரிப்பினால் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் விலையில் தாக்கம் செலுத்ததாது வரி விலக்கு வழங்கப்படும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு முதல் காலாண்டு பகுதியில் மத வழிபாட்டு தலங்களுக்கான மின்கட்டண திருத்தத்தில் சலுகை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்
நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தின் போது எதிரணியினர் முன்வைத்த கேள்விகளுக்கு மேற்கண்டவாறு பதிலளித்தார். இதன்போது அவர் மேலும்கூறுகையில்,
வற் வரி அதிகரிப்புடன் எரிபொருள் விலை சடுதியாக அதிகரிக்க கூடும் என எதிர்தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.வற் வரி தொடர்பில் ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இறுதி முடிவு அடுத்த மாதம் 10 ஆம் திகதி அறிவிக்கப்படும்.அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள வற் வரியில் மண்ணெண்ணெய் மற்றும் டீசலுக்கு வரி விலக்களிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அம்பாந்தோட்டையில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிர்மாணிப்பு பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும். இந்த திட்டத்துக்கு அமைச்சரவை உபகுழு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் அடுத்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கும் என எதிர்பார்க்கிறேன்.
இரண்டாவது சுத்திகரிப்பு நிலையத்த்தை ஸ்தாபித்தவுடன் பெற்றோலுடனான இதர பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும்.
அத்துடன் 27 ஆயிரம் மத வழிபாட்டுத் தலங்கள், பல்கலைக்கழகங்கள்,பாடசாலைகள்,பிரதேச மற்றும் மாவட்ட செயலகங்களுக்கு ஒருவருட காலத்துக்குள் புதுப்பிக்கத்தக்க சக்தி வள பயன்பாட்டுடன் மின்சாரம் விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.