ஜா – எலவில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் இறுதி கிரிகை இன்று யாழ்.சாவகச்சேரியில்…
சந்தேக நபரை துரத்திச் சென்ற போது காணமல்போய் சடலமாக மீட்கப்பட்ட ஜா – எல பொலிஸ் உத்தியோகத்தரான 26 வயதுடைய கிருஷ்ணமூர்த்தி பிரதாபனின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இன்று இடம்பெற்றது.
உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை பூரண அரச மரியாதையுடன் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் பொலிஸ் திணைக்களத்தினர் இறுதி மரியாதையை செலுத்தினர்.
இறுதிக் கிரியையின் போது
மேல்மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கலந்து கொண்டு உயிரிழந்தவருக்கு இறுதி மரியாதையை செலுத்தி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ஒரு தொகை பணத்தையும் கையளித்தார்.
உயிரை துச்சமென கருதி
உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தி பிரதாபன் பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்வு பெற்றுள்ளதுடன் அவருக்குரிய கொடுப்பனவுகள் கிடைக்கபெறும் என மேல்மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் குடும்பத்தினருக்கு வாக்குறுதியளித்தார்.
இதன்போது பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள், வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் பூதவுடல் அரச மரியாதையுடன் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில்
இன்று மதியம் தகனம் செய்யப்படவுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (23) குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மேலும் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஜா-எல பகுதியில் நீரோடை மூலம் தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை துரத்திச் சென்ற போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.