புத்தருக்கு காவிபோர்த்தியது யார்? விசாரணை தீவிரம்!
அநுராதபுரத்திலுள்ள அவுக்கண புத்தர் சிலைக்கு காவி உடை அணிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சிலைகளின் தன்மையை மாற்றுவது தண்டனைக்குரிய குற்றம்
தொல்லியல் திணைக்களத்தின் கருத்துப்படி, தொல்பொருள் சான்றுகள் என கருதப்படும் சிலைகளின் தன்மையை மாற்றுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
அவுக்கண புத்தர் சிலை இலங்கையின் மிக உயரமான புராதன புத்தர் சிலையாகும். 5 ஆம் நூற்றாண்டில் மன்னர் தாதுசேனனால் கட்டப்பட்ட அவுக்கண புத்தர் சிலை 12 மீட்டர் உயரம் உடையது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்களால் வழிபடப்படும் அவுக்கண புத்தர் சிலைக்கு, காவி உடை அணிவிக்க குழுவொன்று முயற்சிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியதை அடுத்து அது தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.