இஸ்ரேலியருக்கு சொந்தமான கப்பல் விடுவிப்பு
யேமன் கடல் பகுதியில் தங்களால் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றப்பட்ட இஸ்ரேலியருக்கு சொந்தமான சரக்கு கப்பலை ஆயுதக் குழுவினா் விடுவித்தனா்.
இது குறித்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாவது:
ஸோடியாக் மேரிடைம் என்ற நிறுவனத்தால் நிா்வகிக்கப்படும் ‘சென்ட்ரல் பாா்க்’ என்ற கப்பலை ஏடன் வளைகுடா பகுதியில் ஓா் ஆயுதக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினா்.
எனினும், அந்தக் கப்பலைக் கைப்பற்றியவா்கள் அதனை பின்னா் விடுவித்துவிட்டனா் என்று அதிகாரிகள் கூறினா்.
சா்வதேச கூட்டுப் படைக் கப்பல்கள் உடனடியாகத் தலையிட்டால் அந்தக் கப்பல் விடுவிக்கப்பட்டதாகவும், அதிலிருந்த மாலுமிகள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் ஸோடியாக் மேரிடைம் நிறுனம் தெரிவத்துள்ளது.
முன்னதாக, அந்தக் கப்பலில் இந்தியா, ரஷியா, வியத்நாம், பல்கேரியா, ஜியாா்ஜியா, ஃபிலிப்பின்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா் 22 பணியாளா்கள் இருந்ததாக அந்த நிறுவனம் கூறியிருந்தது.
லண்டனைச் சோ்ந்த ஸோடியாக் மேரிடைம் நிறுவன் இஸ்ரேலிய கோடீஸ்வரா் எயல் ஒஃபரின் ஸோடியாக் குழுமத்தின் துணை நிறுவனம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா நோக்கி வந்த இஸ்ரேல் சரக்கு கப்பல் அண்மையில் யேமனைச் சோ்ந்த ஹூதி ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்டது. இந்திய பெருங்கடல் பகுதியில் இஸ்ரேல் தொழிலதிபருக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்தது.
இந்நிலையில், மூன்றாவது சம்பவமாக இஸ்ரேலியருக்குச் சொந்தமான சரக்கு கப்பல் சிறைபிடிக்கப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யேமன் கடல் பகுதியில் இதுபோன்ற செயல்களில் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சிப் படையினா்தான் ஈடுபடுகிறாா்கள் என்று ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட அரசு குற்றம் சாட்டி வருகிறது.