மைத்திரிக்கு வழங்கப்பட்ட பதவி: பின்னணியில் சதி
கடந்த 2010ஆம் ஆண்டு எனக்கு சுகாதார அமைச்சு வழங்கப்பட்டதன் பின்னணியில் பாரிய சதி நடவடிக்கை இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசியல் ரீதியில் என்னை இல்லாதொழிக்கும் வகையிலேயே 2010ஆம் ஆண்டு எனக்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இறுதியில் அதுவே,என்னை ஜனாதிபதி பதவி வரை உயர்த்திச் சென்றது.
நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டம்
நாட்டிலுள்ள 40 கிராம வைத்தியசாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் அது நூறு என்ற எண்ணிக்கையை கடந்து செல்லலாம். பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் என்ற ஒரு சேவை சுகாதாரத் துறையில் காணப்பட்டது. அத்தகைய மருத்துவர்களை இவ்வாறு மூடப்பட்டு வரும் வைத்தியசாலைகளுக்கு நியமிக்கலாம்.
இவ்வாறு செயற்பட்டால் வைத்தியசாலைகளை மூடாமல் தொடர்ந்து அவற்றை முன்னெடுத்துச் செல்ல முடியும். எனினும், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அந்த சேவையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தது.
பௌதிக வளங்களை அபிவிருத்தி செய்வது மட்டுமின்றி, நோய்களுக்கான சிகிச்சை ஆரம்ப சுகாதார சேவை ஆகியவற்றை முன்னேற்றுவது அவசியமாகும்.
போஷணை தொடர்பான அதிகாரிகள் சுகாதாரத்துறையில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர். அவ்வாறு அந்த அதிகாரிகள் உருவாக்கப்படுவதை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமே நிறுத்தியது.
கொரியா போன்ற நாடுகளில் பிரதேச மட்டத்தில் அவ்வாறான அதிகாரிகள் சேவையாற்றி வருகின்றனர். இவர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு போஷணை தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்குகின்றனர்.
இதன் மூலம் நோய் நிவாரண நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். அவ்வாறான ஒரு வேலைத் திட்டம் எமது நாட்டிலும் நடைமுறைப்படுத்தினால் அது மிகவும் பொருத்தமானதாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.