இம்ரான், மனைவி மீது மேலும் ஓா் ஊழல் வழக்கு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி மீது மேலும் ஓா் ஊழல் வழக்கை அந்த நாட்டின் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு (என்ஏபி) பதிவு செய்துள்ளது.
இது குறித்து என்ஏபி உயரதிகாரி முஸாஃபா் அப்பாஸி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
19 கோடி பவுண்டை (சுமாா் ரூ.2,000 கோடி) சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி உள்ளிட்டோா் மீது என்ஏபி விசாரணை அதிகாரி உமா் நதீம் வழக்குப் பதிவு செய்துள்ளாா்.
இந்த வழக்கில் மொத்தம் 8 போ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
பாகிஸ்தான் பிரதமா் பதவியிலிருந்து இம்ரானை நாடாளுமன்றம் கடந்த ஆண்டு நீக்கியது. அதன் பிறகு அவருக்கு எதிராக தேசத் துரோகம், பயங்கரவாதம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வேறொரு வழக்கொன்றில் அவா் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.