இலங்கையில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் உற்பத்தி : நாளொன்றுக்கு 900 மெற்றிக் தொன்கள் வரை உற்பத்தி
இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 938 மெற்றிக் தொன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுவதாக, சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் அண்மையில் நாடாளுமன்றம் கூடிய போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இறக்குமதி செய்ய அனுமதி
நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பிளாஸ்டிக்கில் 32 சதவீதம் மட்டுமே சேகரிக்கப்படுகிறது, சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கில் 4 சதவீதம் மட்டுமே இயந்திர ரீதியாக மறுசுழற்சி செய்யப்படுகிறது.
மிகுதியாகவுள்ளவை சேகரிக்கப்பட்டாலும், முறைசாரா முறையில் அப்புறப்படுத்தப்படும் சூழலே நிலவுகின்றது.
மேலும், தொழில்துறையினருக்கு எந்தவித விதிமுறைகளும் இன்றி இரண்டாம் நிலை பிளாஸ்டிக்கை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே எதிர்காலத்தில் தொழில்துறையின் தேவைக்கேற்ப உரிமங்களை வழங்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு துறைசார் மேற்பார்வைக் குழு அறிவுறுத்தியுள்ளது.
பிளாஸ்டிக்கை சேகரிக்கும் அமைப்பு
தவிரவும், இலங்கையில் வருடாந்தம் 4 இலட்சம் மெற்றிக் தொன் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது,அதுமாத்திரமன்றி 20,000 மெற்றிக் தொன் கழிவு பிளாஸ்டிக்கை இறக்குமதி செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் சென்ற ஆண்டு (202) 20,000 மெற்றிக் தொன் கழிவு பிளாஸ்டிக் இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்ட போதிலும், இலங்கையின் தொழிற்சாலைகளுக்கு 5,179 மெற்றிக் தொன் கழிவு பிளாஸ்டிக் மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனவே, தொழில் துறையின் தேவையை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப அனுமதிகள் வழங்கப்பட வேண்டும்.
மேலும் இன்னும் 5 ஆண்டுகளுக்குள் பிளாஸ்டிக்கை சேகரிக்கும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனக் குழு தலைவர் அறிவுரை வழங்கினார்.
நிலைமை இவ்வாறிருக்கையில், அதிக விலை காரணமாக பிளாஸ்டிக்கை மறுசுழற்சிக்காக சேகரிப்பதில் ஆர்வம் காட்டும் நிலை குறைந்துள்ளது.
பிளாஸ்டிக் சேகரிப்புக்கான ஊக்கத்தொகையை அதிகரிப்பதன் மூலம் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என குழுத் தலைவர் குறிப்பிட்டார்.
மேலும், பிளாஸ்டிக்கை சேகரிப்பிற்காக இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பு மையங்களை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.