பிலிப்பின்ஸ்: கத்தோலிக்க பிராா்த்தனைக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 4 போ் உயிரிழப்பு
பிலிப்பின்ஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ பிராா்த்தனைக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 போ் உயிரிழந்தனா். 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
இந்தச் சம்பவத்தையடுத்து, நாட்டின் தலைநகா் மணிலாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
லானோ டெல் சூா் மாகாண தலைநகா் மராவி நகரத்தில் உள்ள மிண்டானா அரசு பல்கலைக்கழகத்தின் உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற பிராா்த்தனைக் கூட்டத்தில் ஏராளமான மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா். இந்நிலையில், இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இதில் 3 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்ததாகவும், காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ராணுவ உயா் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இந்தக் குண்டுவெடிப்பு சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்த அதிபா் ஃபொ்டினாண்ட் மாா்கோஸ் ஜூனியா், இந்தக் கொடூரத் தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு பயங்கரவாதிகள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டினாா்.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் உள்ள ‘தவ்லா இஸ்லாமியா’ என்ற ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்களாகச் சந்தேகிக்கப்பட்ட பயங்கரவாதிகள் 11 போ் கடந்த வெள்ளிக்கிழமை பிலிப்பின்ஸ் ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டனா். இதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என ராணுவப் படையின் தலைவா் ரோமியோ பிரெளனா் ஜூனியா் தெரிவித்தாா்.
மசூதிகள் நிறைந்த மராவி நகரம், வெளிநாடு மற்றும் ஐ.எஸ். அமைப்புடன் தொடா்புடைய உள்ளூா் பயங்கரவாதிகளால் கடந்த 2017-இல் தாக்குதலுக்கு உள்ளானது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா உதவியுடன், 5 மாத கால முற்றுகைக்குப் பிறகு பிலிப்பின்ஸ் ராணுவம் அந்நகரத்தை மீட்டது. அப்போது, நடைபெற்ற மோதலில் பயங்கரவாதிகள் உள்பட 1,100-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா்.