ஹமாஸ் தலைவர்களுக்கு எங்கிருந்தாலும் அழிவு: இஸ்ரேலின் ராத் ஆப் காட் திட்டம்
ஹமாஸ் தலைவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களை அழிப்பதற்கு இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போர் நிறுத்தம் முடிவடைந்து 3 நாட்களை கடந்துவிட்டுள்ள நிலையில் மீண்டும் போர் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், போர் முடிவடைந்தாலும் ஹமாஸ் தலைவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களை தேடி கொலை செய்வதற்கு இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மொசாட்டின் திட்டம்
ஹமாஸ் தலைவர்களை கொலை செய்யும் இந்த திட்டத்திற்கு “ஒப்ரேஷன் ராத் ஆப் காட்” போன்ற திட்டத்தை ஒப்புதல் அளிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்போது, குறிப்பாக துருக்கி மற்றும் லெபனான் நாடுகளில் உள்ள ஹமாஸ் தலைவர்களை கொல்ல இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் அமைப்பு திட்டம் வகுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான பின்விளைவு
அத்தோடு, மொசாட் படையினர் தயாரித்து வருவதாக கூறப்படும் பட்டியலொன்றில் இஸ்மாயில் ஹனியே, முகம்மது டெய்பி, யாயா சின்வார் மற்றும் காலித் மஷால் ஆகியோரின் பெயர்கள் அடங்குவதாக கூறப்படுகிறது.
மேலும், இஸ்ரேல் மற்றும் மொசாட்டின் இந்த திட்டம் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என மொசாட் அமைப்பின் முன்னாள் இயக்குநர் இப்ரெய்ம் ஹலெவி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.