இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா…!
இலங்கைக்கு இந்த ஆண்டு (2023) நவம்பர் மாதத்தில் வருகை தந்துள்ள சுற்றுலாப்பயணிகள் தொடர்பான தகவல்களை இலங்கை சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், கடந்த மாதம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் மாதாந்த புள்ளிவிபரங்களின்படி நவம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை சுமார் 151,496 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்குப் பின்
இதன் மூலம் இந்த ஆண்டின் அதிகூடிய சுற்றுலாப்பயணிகளை உள்வாங்கிய மாதமாக நவம்பர் மாதம் காணப்படுகிறது.
கொரோனா தொற்றுக்காலத்திற்குப் பின்னர் 150,000 சுற்றுலாப்பயணிகளை வரவேற்ற ஆண்டாகவும் (2023) விளங்குகின்றது.
இருந்த போதிலும் நவம்பர் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை சுற்றுலாத்துறை அடையவில்லை,204,114 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என கணிக்கப்பட்டிருந்த போதும் அதில் 75% மாத்திரமே அடையப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதுமாத்திரமல்லாமல், இந்த ஆண்டின் மே மாதத்தைத் தவிர மற்றைய அனைத்து மாதங்களிலும் சுமார் 100,000 வரையான சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவுசெய்யப்பட்டுள்ளது.
முதலாவது இடத்தினை
நவம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் மொத்த வருகையில் 20 சதவீதத்தைப் பிடித்து நவம்பர் மாதமும் அதிகளவான சுற்றுலாப்பயணிகளின் வருகையில் முதலாவது இடத்தினை இந்தியா பிடித்திருக்கிறது.
மேலும் 16 சதவீத சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ரஷ்யா இரண்டாவது இடத்தினையும், 8 சதவீத சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஜெர்மனி மூன்றாவது இடத்திலும் உள்ளது.
அதேபோல் ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ்ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
நவம்பர் மாதத்துடன் சேர்த்து, இந்த ஆண்டு (2023) இதுவரை மொத்தமாக 1.27 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை பதிவு செய்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.