பறவை மோதி விபத்துக்குள்ளான அமெரிக்க போர் விமானம்: அதிகாரிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு
தென் கொரியாவில் பறவை மோதியதில் விபத்துக்குள்ளான அமெரிக்காவின் போர் விமானத்தை கைவிடுவதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
போர் விமானத்தில் மோதிய பறவை
அமெரிக்காவின் F-35A ஸ்டெல்த் ஜெட்(F-35 A stealth jet) விமானம் தென் கொரியாவில் பறவை மோதி சேதமடைந்ததை அடுத்து அதை முற்றிலுமாக கைவிடுவதாக வெள்ளிக்கிழமை விமானப்படை தெரிவித்துள்ளது.
பறவை மோதியதில் F-35A விமானத்தில் ஏர் பிரேம், எஞ்சின், கட்டுப்பாடு மற்றும் அமைப்பு, உட்பட 300 பாகங்கள் சேதமடைந்துள்ளது என அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தின் பாதுகாப்பு முக்கியத்துவம் மற்றும் பழுது பார்க்க அதிகமான பணச் செலவும், நீண்ட நேரமும் தேவைப்படுவதால், விமானத்தை சரி செய்வதை விட கைவிடுவது நல்ல முடிவு என விமானப்படையின் ஆய்வுக் குழு முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஏனென்றால் புதிய ஜெட் விமானத்திற்கே 110 பில்லியன் வான் பணம் மட்டுமே தேவைப்படும் நிலையில், விபத்துக்குள்ளான F-35A ஸ்டெல்த் ஜெட் விமானத்தை சரி செய்ய சுமார் 140 பில்லியன் வான்(US$107.6 million) தேவைப்படுகிறது என ராணுவ அதிகாரிகள் வழங்கிய தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
ஆனால் இவ்வாறு கைவிடப்படும் விமானங்கள் பல வகையில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது, குறிப்பாக இயந்திர வல்லுநர்களின்(mechanics) பயிற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.