சீனாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 600 வெளிநாட்டவர்கள் மாயம்: மனித உரிமைகள் அமைப்பு தகவல்
சீனாவால் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்ட 600 வட கொரியர்கள் காணாமல் போயுள்ளனர் என்று தென் கொரியாவை சேர்ந்த மனித உரிமைகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக
குறித்த 600 பேர்களும் வடகொரியாவில் சிறைத்தண்டனை, சித்திரவதை, வன்கொடுமை மற்றும் மரணதண்டனை ஆகியவற்றை சந்திக்க நேரிடும் என்றே கூறுகின்றனர்.
தென் கொரியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற வட கொரியர்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகக் கூறி தென் கொரியா சீனாவிடம் எதிர்ப்புத் தெரிவித்ததன் இரண்டு மாதங்களுக்கு பின்னர், தொடர்புடைய அறிக்கை வெளியாகியுள்ளது.
குறித்த அறிக்கையில், நூற்றுக்கணக்கான வடகொரியர்கள் சீனாவின் தடுப்பு முகாம்களில் இருந்து ஆயுதம் ஏந்திய வீரர்களுடன் பேருந்துகள் மற்றும் வேன்களில் அக்டோபர் 9ம் திகதி எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் மற்றும் துரோகிகள்
கடந்த பல ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு நடவடிக்கை சீனாவில் இதுவே முதன்முறை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடகொரியாவில் இருந்து தப்பியவர்களின் அடையாளம் தெரியவில்லை, ஆனால் அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அவர்களுடனான தொடர்பு ஏதும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் வலுக்கட்டாயமாக சித்திரவதைக்கும், வன்கொடுமைக்கும் துஸ்பிரயோகத்திற்கும் இரையாக்கியுள்ளதாக அந்த மனித உரிமைகள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
அவர்கள் குற்றவாளிகள் மற்றும் துரோகிகள் என அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் வதை முகாம்களில் சிறை, கட்டாய கருக்கலைப்பு மற்றும் மரணதண்டனையை எதிர்கொள்ளலாம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த 600 பேர்கள் தொடர்பில் வடகொரிய நிர்வாகம் இதுவரை கருத்து தெரிவிக்க மறுத்து வருகிறது.