பிரித்தானியாவில் வேகமாக பரவும் 100 நாட்கள் நீடிக்கும் ஆபத்தான இருமல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பிரித்தானியாவில் தொற்றும் தன்மை கொண்ட 100 நாட்கள் வரையில் நீடிக்கும் மிக ஆபத்தான இருமல் வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எண்ணிக்கை 250 சதவீதம் அதிகரிப்பு
பிரித்தானியாவில் சளி போன்ற அறிகுறிகளுடன் தொடங்கும், ஆனால் மூன்று மாதங்கள் வரை நீடிக்கும் கடுமையான இருமல் பரவி வருவதாகவும், சமீபத்திய ஆய்வுகளின்படி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 250 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
100 நாட்கள் வரையில் நீடிக்கும் இந்த இருமலானது, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும், கடந்த 7 மாதங்களில் மட்டும் 716 பேர்கள் இந்த தொற்றும் தன்மை கொண்ட இருமலுக்கு இலக்காகியுள்ளதாகவும் சுகாதரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சுகாதாரத்துறை நிபுணர் ஒருவர் தெரிவிக்கையில், தொற்றும் தன்மை கொண்ட இந்த ஆபத்தான இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது, எனவே கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் குழந்தையைப் பாதுகாக்கும் பொருட்டு தடுப்பூசி போடுவதை உறுதி செய்வது அவசியம் என்றார்.
மேலும், பிஞ்சு குழந்தைகளில் இந்த மோசமான இருமல் மிகவும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும், கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதே முதல் சில மாதங்களில் அந்த பிஞ்சு குழந்தைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஒரே வழி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிஞ்சு குழந்தைகளுக்கும் சிறார்களுக்கும்
மட்டுமின்றி, இந்த பாக்டீரியா தொற்றானது நுரையீரல் மற்றும் தொண்டையை பாதிக்கிறது, மேலும் எளிதில் பரவுகிறது மட்டுமின்றி சில நேரங்களில் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்வதே பிஞ்சு குழந்தைகளுக்கும் சிறார்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல் தப்பிக்க ஒரே வழி எனவும் தெரிவித்துள்ளார். இப்படியான மோசமான இருமல் வாந்தி, விலா எலும்பு முறிவு மற்றும் சோர்வு போன்றவற்றுக்கு வழிவகுக்கும் அளவுக்கு தீவிரமாக இருக்கலாம் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வகை மோசமான இருமல் காரணமாக 2015ல் உலகம் முழுவதும் 58,700 பேர்கள் மரணமடைந்துள்ளனர். ஆனால் இதே வகை இருமல் காரணமாக 1990ல் 138,000 மக்கள் மரணமடைந்துள்ளனர்.
இந்த இருமலால் பாதிக்கப்பட்டால், முதல் அறிகுறி தென்படவே 7 முதல் 10 நாட்கள் வரை தாமதமாகலாம் எனவும், முதலில் லேசான இருமல் இருக்கும், அதன் பின்னர் மிக மோசமான பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளனர்.