;
Athirady Tamil News

மதுபான சாலைகளை காட்டி சுற்றுலா பயணிகளை கொண்டு வர வேண்டிய தேவையில்லை

0

வடக்கு கிழக்கில் சுற்றுலாவை விருத்தி செய்ய வேண்டுமானால் சுற்றுலா மையங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். மதுபானத்தை காட்டி எங்கள் பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணிகளை கொண்டுவர வேண்டிய தேவை இல்லை என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி மீளவும் மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே ச.சுகிர்தன் இதனை தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்,

உடுப்பிட்டியில் மக்கள் செறிவுள்ள பகுதியில் சில மாதங்களுக்கு முன் மதுபான விற்பனை நிலையம் அமைக்கப்பட்டது.

இதற்கு எதிராக மக்கள் பெருமளவில் போராட்டம் செய்தபோது பொதுமக்களின் எதிர்ப்பை கருத்திற்கொண்டு மதுபான விற்பனை நிலையத்தின் அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டது.

ஆனால் தற்போது சில நாட்களாக மதுபான விற்பனை நிலையம் திறந்து வியாபாரத்தில் ஈடுபடுகிறது.

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி
இமையாணன் இ.த.க பாடசாலை, நவிண்டில் தாமோதரா பாடசாலை என்பன குறித்த மதுபானசாலைக்கு மிகக் குறைந்த தூரத்திலிருக்கிறது.

இதுதொடர்பாக கரவெட்டி பிரதேச செயலாளரை பொது அமைப்புகள் தொடர்பு கொண்டபோது நேரடியாகவும் வாய் மொழி மூலமாகவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தனக்கு அறிவுறுத்தியதனால் தான் இடத்திற்கான சிபார்சினை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரை சந்தித்து கலந்துரையாடி மகஜரை கையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆறு வருடங்களுக்கு முன்னரும் மதுபான விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு பல சமூக சீரழிவுகள் ஏற்பட்டதால் பொது மக்கள் போராட்டம் செய்து மதுபான விற்பனை நிலையம் அகற்றப்பட்டது. இரண்டாம் தடவையாக கொண்டுவர முயற்சித்தும் அது முடியாத நிலையில் மூன்றாவது தடவையாக திறக்கப்பட்ட மதுபான நிலையம் பொதுமக்கள் எதிர்ப்பினால் மூடப்பட்ட போது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அதில் தலையிட்டு அதை திறந்து வைக்க உத்தரவிட்டார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரது சந்திப்பில் சாதகமான முடிவு கிடைக்குமென பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கருதுகின்றனர்.

இது புதிய மதுபானசாலை அல்ல. கடந்த காலங்களில் நெல்லியடியில் இயங்கிய மதுபான விற்பனை நிலையமே இங்கு இடமாற்றப்பட்டுள்ளது. ஆகவே அது பழைய இடத்திலேயே இயங்குவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் இந்த இடத்தில் இருந்து மதுபான விற்பனை நிலையம் அகற்றப்பட வேண்டும். இதற்கு அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.