பாகிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 23 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
பெஷாவர்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ வீரர்கள் 23 பேர் கொல்லப்பட்டனர்.
கைபர்-பக்துன்கவா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அண்மைக் காலங்களில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாகக்
கருதப்படுகிறது.
கைபர்-பக்துன்கவா மாகாணத்தின் தெற்கு வஸிரிஸ்தான் மாவட்டத்தில் தேரா இஸ்மாயில் கான் தாராபன் என்ற இடத்தில் உள்ள ராணுவ நிலை மீது 6 பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தாக்குதல் நடத்தினர்.
அந்தத் தாக்குதலை பாதுகாப்புப் படையினர் முறியடித்ததைத் தொடர்ந்து, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு வாகனத்தை ஓட்டி வந்து ராணுவ நிலை கட்டடம் மீது பயங்கரவாதிகள் மோதினர். மேலும் தற்கொலைத் தாக்குதலும் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியதால் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில், ராணுவ வீரர்கள் 23 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 6 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர் என பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
“பாகிஸ்தான் தலிபான்’ எனப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பின் துணை அமைப்பான தெஹ்ரீக்-ஏ-ஜிஹாத் பாகிஸ்தான் (டிஜெபி) என்ற பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
புதிதாகத் தொடங்கப்பட்ட டிஜெபி அமைப்பு அண்மைக் காலமாக பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.
லாகூரிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள பாகிஸ்தான் விமானப் படை பயிற்சித் தளத்தில் இந்த அமைப்பு கடந்த நவ. 4-ஆம் தேதி நடத்திய தாக்குதலில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூன்று விமானங்கள் சேதமடைந்தன. பலூசிஸ்தான் மாகாணத்தில் ஜூலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.