;
Athirady Tamil News

6 நண்பர்கள் திட்டமிட்டு அரங்கேற்றியது அம்பலம்

0

புது தில்லி: மக்களவையில் இரு இளைஞர்கள் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தின் பின்னணியில் மேலும் 4 பேர் இருப்பதும், நண்பர்களான இவர்கள் இணைந்து திட்டமிட்டு இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மக்களவையில் புதன்கிழமை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதேபோன்று புகைக் குப்பிகளை வீசி பெண் உள்பட இருவர் தாக்குதல் நடத்தினர்.
இவர்கள் 4 பேரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்து தில்லி போலீஸிடம் ஒப்படைந்தனர். நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றம் மீதான பயங்கரவாதத் தாக்குதலின் 22-ஆம் ஆண்டு நினைவு தினத்தில் நடந்த இந்தத் தாக்குதல் திட்டத்தை 6 நண்பர்கள் இணைந்து செயல்படுத்தியது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமூக ஊடகங்கள் வாயிலாக தொடர்பில் இருந்துவந்த உத்தர பிரதேசத்தின் லக்னெளவைச் சேர்ந்த சாகர் சர்மா, கர்நாடகத்தின் மைசூரைச் சேர்ந்த டி.மனோரஞ்சன், ஹரியாணாவைச் சேர்ந்த நீலம் தேவி, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அமோல் ஷிண்டே, குருகிராம் நகரில் வசித்து வரும் விஷால், லலித் ஆகிய 6 பேர் இந்தத் தாக்குதலுக்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான 6 பேரும் கடந்த சில நாள்களாக இந்தத் தாக்குதலுக்காக திட்டமிட்டு வந்துள்ளனர்.
ஹரியாணாவின் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த நீலம் தேவி, போட்டித் தேர்வுகளுக்காக பயின்று வருகிறார். ஏம்.ஏ., பி.எட், எம்.எட் பட்டங்களைப் பெற்றுள்ள இவர் நெட் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
ஏற்றுமதி நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் விஷால் சர்மா, அவ்வப்போது ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். மதுபோதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவார் எனவும் அக்கம்பக்கத்தினர் குற்றஞ்சாட்டினர்.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த வேலையில்லாப் பட்டதாரியான அமோல், கல்யாண் பகுதியில் இருந்து 5 புகைக் குப்பிகளை ரூ.1200-க்கு வாங்கிக் கொண்டு தில்லிக்கு வந்துள்ளார்.
மனோரஞ்சன், மைசூரு தொகுதி எம்.பி. அலுவலகத்துக்கு தொடர்ச்சியாக சென்று, மக்களவைச் செயல்பாடுகளைக் காண்பதற்காக பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரையில் அனுமதிச் சீட்டு பெற்றுள்ளார். எம்.பி. அலுவலகத்தில் சாகரை தன் நண்பர் என்று அறிமுகப்படுத்தி அழைத்து வந்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு வருகை தருவதற்கு முன்பு குருகிராமில் உள்ள விஷாலின் வீட்டில் அனைவரும் தங்கியுள்ளனர். நாடாளுமன்றத்துக்குள் செல்ல 6 பேரும் விரும்பினாலும் 2 அனுமதிச் சீட்டு மட்டுமே கிடைத்ததால் மனோரஞ்சனும், சாகரும் நாடாளுமன்றத்துக்குள் சென்று தாக்குதல் நடத்தினர்.
அதேநேரத்தில், நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்த நீலம் தேவியும், அமோல் ஷிண்டேயும் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். நீலம் தேவி, அமோல் ஷிண்டே இருவரும் புகைக் குப்பி வீசி தாக்குதலில் ஈடுபடுவதை கைப்பேசியில் படம்பிடித்த லலித், அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றினார். தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரின் கைப்பேசியும் லலித் வசமிருக்கிறது.
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய லலித் வசமுள்ள குற்றவாளிகளின் கைப்பேசிகளைக் கைப்பற்றினால் பல்வேறு தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அவரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விஷால் மற்றும் அவரின் மனைவியையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“விவசாயிகள் போராட்டம், மணிப்பூர் கலவரம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட விவகாரங்களால் மத்திய அரசின் மீது தங்கள் அனைவருக்கும் அதிருப்தி நிலவியதாகவும், அரசுக்கு ஒரு செய்தியை வழங்க இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும்’ தாக்குதலில் ஈடுபட்டவர்கள் போலீஸ் விசாரணையில் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு யாரேனும் அல்லது எந்த அமைப்பாவது இவர்களை ஊக்குவித்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை
தொடர்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.