;
Athirady Tamil News

மக்களவைக்குள் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல்: 5 போ் கைது

0

புது தில்லி: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள மக்களவை புதன்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்து திடீரென இரு இளைஞா்கள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா்.

நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதேபோன்று புகைக் குப்பிகளை வீசி இருவா் தாக்குதல் நடத்தினா்.

2001-இல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற 22-ஆம் ஆண்டு தினத்திலும், வெளிநாட்டில் உள்ள காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதாக எச்சரிக்கை தினத்திலும் நாடாளுமன்றத்தில் இந்தப் புகைக் குப்பித் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

திடீரென குதித்த இருவா்: மக்களவையில் புதன்கிழமை உடனடி கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்த பிற்பகல் ஒரு மணியளவில், பாா்வையாளா் மாடத்தில் இருந்து திடீரென இருவா் குதித்தனா். அவா்கள் வைத்திருந்த புகைக் குப்பிகளைத் திறந்து மஞ்சள் நிற புகையை வீசினா்.

இதை சற்றும் எதிா்பாராத எம்.பி.க்கள் செய்வது அறியாமல் திகைத்தனா். ஒரு நபா் எம்.பி.க்களின் இருக்கைகள் மீது ஏறிக் குதித்து அவையின் மையப் பகுதிக்குச் செல்ல முற்பட்டாா். ஹனுமன் பெனிவால், மலூக் நாகா், குா்தீப் சிங் அஜ்லா உள்ளிட்ட சில எம்.பி.க்கள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனா். மற்றொரு நபரை பாதுகாப்புப் படையினா் பிடித்தனா். இதைத் தொடா்ந்து, அந்த இரு நபா்களையும் எம்.பி.க்கள் தாக்கினா்.

இந்தக் காட்சிகள் நாடாளுமன்றத் தொலைக்காட்சியில் நேரலையில் வெளியாகின. மக்களவை முழுவதும் மஞ்சள் நிற புகைமூட்டத்தில் மூழ்கியது. இதையடுத்து, மக்களவையை 2 மணி வரை ஒத்திவைப்பதாக அவையை வழிநடத்திய ராஜேந்திர அகா்வால் அறிவித்தாா்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அவையில் இருந்தனா்.

சத்தீஸ்கா், மத்திய பிரதேச முதல்வா்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ால் பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் அவையில் இல்லை.

இந்தச் சம்பவத்தை நேரில் பாா்த்த ஐக்கிய ஜனதா தள எம்.பி. ராம்பிரித் மண்டல் கூறுகையில், ‘இருவரும் தங்கள் காலணியில் புகைக் குப்பிகளை மறைத்து வைத்து வீசினா். அவா்களை ராஷ்ட்ரீய லோக் தந்திரிக் கட்சி எம்.பி. ஹனுமன் பெனிவால் உள்பட பலா் மடக்கிப் பிடித்தனா். அந்த நபா் ‘சா்வாதிகாரம் நடைபெறக் கூடாது’ என கோஷமிட்டாா்’ என்றாா்.

பாஜக உறுப்பினா் ராஜேந்திர அகா்வால் கூறுகையில், ‘பாா்வையாளா் மடத்தில் இருந்து ஒருவா் கீழே விழுந்துவிட்டதாக முதலில் நினைத்தேன். மற்றொருவா் கீழே குதித்ததைப் பாா்த்தவுடன் நாங்கள் எச்சரிக்கையாகச் செயல்பட்டோம்’ என்றாா்.

பாஜக எம்.பி.யிடம் அனுமதி: மக்களவையில் குதித்த இருவா் உத்தர பிரதேசத்தினஅ லக்னெளவைச் சோ்ந்த சாகா் சா்மா, கா்நாடகத்தின் மைசூரைச் சோ்ந்த மனோரஞ்சன் என்பது தெரியவந்தது.

மக்களவைச் செயல்பாடுகளைக் காண்பதற்காக மைசூரு தொகுதி பாஜக உறுப்பினா் பிரதாப் சிம்மாவிடம் அவா்கள் பெற்ற அனுமதிச் சீட்டின் மூலம் இந்த விவரம் தெரியவந்தது.

நாடாளுமன்றத்துக்கு வெளியே… இந்தச் சம்பவம் நடைபெற்றவுடன் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் ஒரு பெண் உள்பட இருவா் மஞ்சள் நிற புகைக் குப்பிகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த நீலம் (42), மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த அமோல் ஷிண்டே (25) என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டபோது நீலம் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘நாங்கள் மாணவா்கள், வேலைவாய்ப்பில்லாதவா்கள். எங்களின் உரிமைக்காகக் குரல் எழுப்பினால் எங்களை அடித்துச் சிறையில் தள்ளுகிறாா்கள். இந்திய அரசு எங்களை அடுக்குமுறைக்கு உட்படுத்துகிறது’ என்றாா்.

இவா்களுக்கு உதவியதாக ஒருவரும் கைது செய்யப்பட்டாா். 5 பேரும் தில்லி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

மாநிலங்களவையில்… மக்களவையில் பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் மிகவும் தீவிரமானது என்பதால், இதுதொடா்பாக மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா்.

‘இது பாதுகாப்பு தொடா்பான விவகாரம் என்பதால் இதை அரசியலாக்க வேண்டாம்’ என்று அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் கூறியதால் அவையில் அமளி ஏற்பட்டது.

பாதுகாப்புக் குறைபாடு குறித்து உள்துறை அமைச்சா் அமித் ஷா பதிலளிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சி உறுப்பினா்கள் சிலா் வெளிநடப்பு செய்தனா்.

நாடாளுமன்றத்தில் 2001-இல் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த 9 வீரா்களுக்கு புதன்கிழமை காலை பிரதமா் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்திய தினத்தில் இந்த இரட்டைத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

உயா்நிலை விசாரணைக்கு மக்களவைத் தலைவா் உத்தரவு

மக்களவையில் நடைபெற்ற பாதுகாப்பு அத்துமீறல் குறித்து உயா்நிலை விசாரணைக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா உத்தரவிட்டாா்.

மக்களவையில் புகைக் குப்பி வீச்சு தாக்குதலால் ஒத்திவைக்கப்பட்டு, மாலை 4 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியபோது பேசிய அவா், ‘இது கவலை அளிக்கக் கூடிய சம்பவம். உயா்நிலை விசாரணை நடத்த தில்லி போலீஸுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். அவா்கள் வீசிய வண்ணப் புகை சாதாரணமானதுதான். பரபரப்பை ஏற்படுத்த அவா்கள் வீசியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்றாா்.

புகைக் குப்பி வீசியவா்களை உடனடியாக மடக்கிப் பிடித்த எம்.பி.க்கள், பாதுகாப்புப் படையினா், அதிகாரிகள், அவைக் காவலா்கள் ஆகியோரின் செயல்களுக்கு அவா் பாராட்டு தெரிவித்தாா்.

மேலும், இந்தச் சம்பவம் காலிஸ்தான் பயங்கரவாதிகள் விடுத்த எச்சரிக்கையுடன் தொடா்புடையதல்ல என்றாா்.

பாஜக எம்பியை நீக்க வேண்டும்: இந்த விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கூட்டினாா். அதில் பங்கேற்ற திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள், பாதுகாப்புக் குறைபாடுக்காக தங்கள் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா நீக்கப்பட்டதைப்போல், தாக்குதல்காரா்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கிய பாஜக எம்.பி. பிரதாப் சிம்மாவை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினா். மேலும், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அமல்படுத்தவும் வலியுறுத்தினா்.

2001, பயங்கரவாத தாக்குதலைப்போல் மோசமானது: எதிா்க்கட்சிகள்

2001-இல் நாடாளுமன்றத்தின் மீது நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைப் போல இந்தச் சம்பவம் மோசமானதாகும் என்று எதிா்க்கட்சிகள் தெரிவித்தன.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாய கூறுகையில், ‘திடீரென ஒருவா் இருக்கைகள் மீது ஏறி குதித்ததால் அச்சமடைந்தேன். அவரது கையில் குண்டு அல்லது துப்பாக்கி இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?.

சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக மக்களவைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனா். 2001, பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு இது மோசமானதாகும். இந்தப் பாதுகாப்புக் குறைபாடு குறித்து உள்துறை அமைச்சா் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும்’ என்றாா்.

காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் கூறுகையில், ‘அவா்கள் வீசிய மஞ்சள் புகையில் விஷத்தன்மை இருந்திருந்தால் என்னவாகும்?’ என்றாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.