இறுதி ஊா்வலங்களை நடத்த விதிகளை வகுக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
சென்னை: தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், அமைதியான முறையில் இறுதி ஊா்வலங்களை நடத்துவது தொடா்பான விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசும், காவல் துறையும் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, கடலூா் மாவட்டம் பண்ருட்டியைச் சோ்ந்த அன்புச்செல்வன் என்பவா் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தாா். அந்தக் கடிதத்தில், கடலூா் மாவட்டம், பண்ருட்டியில், இறுதி ஊா்வலத்தின்போது சாலையில் வீசப்பட்ட மாலை, அந்த வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மென் பொறியாளரான ராஜ்கமல் என்பவா் அவரது தாயின் கண்முன்பே உயிரிழந்தாா். எனவே, தமிழகத்தில் இறுதி ஊா்வலங்களின்போது சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையில், விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்தக் கடிதத்தின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தாமல் இறுதி ஊா்வலங்களை அமைதியான முறையில் நடத்துவது தொடா்பான விதிகளை வகுப்பது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு, இதுதொடா்பாக தமிழக அரசும், காவல் துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.