;
Athirady Tamil News

தேசபந்து தென்னகோனின் கொடூர செயல் நீதிமன்றில் அம்பலம்

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டவர், பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒருவரை தகாத முறையில் சித்திரவதை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கொடூரமான விதம் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை சட்டவிரோதமாக கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம் அவரின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இராணுவ அதிகாரி மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் தமது சொந்தப் பணத்தில் நட்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

ஒரு இலட்ச ரூபாய் நட்டஈட்டை வழங்குமாறு அரசாங்கத்திற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு இதனை கட்டாயம் பொறுப்பேற்க வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், ஆனால், குற்றமிழைத்த அதிகாரிகளுக்காக இழப்பீட்டை செலுத்த பொதுமக்களின் மீது சுமையை ஏற்படுத்த நீதிமன்றம் விரும்பவில்லை.

“பல ஆண்டுகளாக தங்கள் சம்பாத்தியத்தில் வரி செலுத்துவோர், அவர்களுடைய குற்றங்களுக்கும் நட்டஈட்டை செலுத்த வேண்டுமா” என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் இராணுவ வீரர் ரஞ்சித் சுமங்கல தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் டிசம்பர் 14, 2023 அன்று இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு
அப்போது நுகேகொட பிரதேசத்திற்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன், மிரிஹான பொலிஸ் அவசர பிரிவின் பொறுப்பதிகாரி பாத்திய ஜயசிங்க, பொலிஸ் அதிகாரி பண்டார மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட் மேஜர் அஜித் வனசுந்தர ஆகியோர் மனுதாரருக்கு தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் தலா ஐந்து இலட்சம் வீதம் நட்டஈடு வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக இந்த தீர்ப்பின் பிரதிகளை தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதி, இராணுவ அதிகாரி அஜித் வனசுந்தரவுடன் முச்சக்கர வண்டியில் வந்த மிரிஹான பொலிஸ் அதிகாரிகளான பண்டார மற்றும் இன்ஸ்பெக்டர் பாத்திய ஜயசிங்க ஆகிய இரு அதிகாரிகள் தம்மை கைது செய்து, தம்பரவிலுள்ள மயானமொன்றுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறும் மனுதாரர் ரஞ்சித் சுமங்கல, தாம் சித்திரவதை செய்யப்பட்ட கொடூரமான விதத்தை நீதிமன்றில் விளக்கியுள்ளார்.

அதன்படி ஒரு நாள் முழுவதும் அவருக்கு உணவு, குடிக்க எதுவும் கொடுக்காமல் பொலிஸார் சித்திரவதை செய்துள்ளனர். “ஆடைகளை காயவைத்த பின்னர், அவர்கள் என்னை மீண்டும் அந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று மேசைக்கு அடியில் கைவிலங்கு போட்டு உட்கார வைத்தார்கள். அன்று எங்களுக்கு உண்ணவோ குடிக்கவோ எதுவும் கொடுக்கப்படவில்லை. பனடோல் வில்லைகள் மாத்திரமே கொடுக்கப்பட்டது. அன்று இரவு நாங்கள் மேசையின் கீழ் இருந்தோம்.

அங்கிருந்தபோது உயர் அதிகாரி ஒருவர் நாங்கள் இருந்த இடத்திற்கு வந்தார். அவர்கள் யார் என அதிகாரிகளிடம் கேட்டார். அப்போது அதிகாரிகள், சேர், இது சார்ஜென்ட் மேஜருடைய வழக்குடன் தொடர்புடையவர்கள். இங்கு மாடு திருடனும் இருப்பதாக கூறினார்கள், என நான் தெரிவிக்கின்றேன்.” என ரஞ்சித் சுமங்கலவின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

கொடுமையான தண்டனை
அப்போது பொலிஸ் அத்தியட்சகர் தரத்தில் இருந்த தேசபந்து தென்னகோன் தம்மை எவ்வாறு பாலியல் வன்கொடுமை செய்தார் என்பதை மனுதாரர் பின்வருமாறு விபரித்துள்ளார். “பின்னர் அந்த அதிகாரி எங்களை நிர்வாணமாக்கி, ஒருவரை ஒருவர் பின்னால் நிறுத்தி, எங்கள் நால்வரையும் மூச்சக்கர வண்டி ரப்பர் பட்டியால் உடல் முழுவதும் அடித்தார்.

எங்களை அடிக்கும்போது சித்தாலேபவை எங்கள் பிறப்புறுப்பில் தேய்க்குமாறு கட்டளையிட்டார். நாங்கள் அசௌகரியத்திற்கு மத்தியில் தேய்த்தோம். அப்போது அவர் பலமுறை தாக்கியதாக குறிப்பிடுகின்றேன்.

அந்த நேரத்தில் வீக்கத்துடன் வலியால் துடித்துக்கொண்டிருந்தோம் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஆடை அணிய விடாதீர்கள் என்றார். சுமார் 2 மணி நேரம் இப்படியே வையுங்கள். நான் மீண்டும் வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். பின்னர், அங்கிருந்த அதிகாரி ஒருவர் சொன்னார், அவர் வேறு நாட்களில் ஆட்களை அடிப்பவர் அல்ல. ஆனால் உங்கள் கருமத்திற்குதான் அவர் உங்களை அடித்தார் எனக் கூறினார்.

அந்த அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் என்பதை பின்னர் அறிந்து கொண்டேன் எனக் குறிப்பிடுகின்றேன்.”

எதிர்மனுதாரர்களின் முரண்பாடான அறிக்கைகளை கவனத்தில் கொண்டு, மனுதாரர் ரஞ்சித் சுமங்கலவின் கூற்று, அவருடன் காவலில் வைக்கப்பட்ட சித்திரவதைக்கு உள்ளான ஏனையவர்களின் வாக்குமூலங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதோடு, மாத்தளை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் அஜித் ஜயசேனவின் அறிக்கையும் இதனை உறுதிப்படுத்துவதாக ஏற்றுக்கொண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.