;
Athirady Tamil News

அப்பாவிகளைக் கொல்லும் காணொலி, சிக்கலில் இஸ்ரேல்!

0

இஸ்ரேல் ராணுவம் தீவிரவாதிகள் அல்லாத பாலஸ்தீனர்கள் இருவரை இரக்கமின்றி கொல்லும் காணொலி பரவிவரும் நிலையில், இஸ்ரேல் ராணுவக் காவல்துறை இது தொடர்பான ஆய்வினை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மேற்குக் கடற்கரைப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட சோதனையின் போது, இரண்டு அப்பாவி பாலஸ்தீனர்களை ராணுவ வீரர்கள் கொல்லும் சிசிடிவி காணொலியை இஸ்ரேலிய மனித உரிமைகள் குழு இணையத்தில் பகிர்ந்தது.

கையில் துப்பாக்கி ஏந்தாத, எந்த வகையிலும் அச்சுறுத்தலில் ஈடுபடாத பொதுமக்கள் இரண்டு பேரை ராணுவ வாகனங்களில் வந்த வீரர்கள் சுட்டனர்.

ஒருவர் காயப்பட்டு கீழே விழுந்து வலியில் துடித்தபோது, வாகனத்தில் அவர் அருகில் சென்று அவர் அசைவின்றிக் கிடக்கும் வரை அவரை சுடும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, அங்கிருந்த காருக்குக் கீழே ஒளிந்து உயிர் தப்பித்த மற்றொருவர் காயத்தால் உயிரிழந்துள்ளார்.

போரில் அப்பாவி மக்களைக் கொல்லும் இஸ்ரேலின் போக்கை பல அமைப்புகளும் நாடுகளும் தொடர்ந்து கண்டித்துவரும் நிலையில் இந்தக் காணொலி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காணொலியைப் பகிர்ந்த பி’டிசெலெம் (B’Tselem) எனும் மனித உரிமைகள் அமைப்பு சட்ட விரோத கொலைகளை இஸ்ரேல் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து பேசிய இஸ்ரேல் ராணுவம், சட்டத்திற்குப் புறம்பான கொலைகளை இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டுள்ளதான குற்றச்சாட்டின் அடிப்படையில், ராணுவக் காவல்துறைப் பிரிவு விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகள் மீது வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், மனித உரிமைகள் குழு 2016 ஆம் ஆண்டு நடந்த இதே போன்ற குற்றத்தை மேற்கோள்காட்டி, குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் ராணுவ வீரர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படாது எனத் தெரிவித்துள்ளனர்.

2016-ல் பாலஸ்தீன போராளியைக் கொன்றதற்காக 9 மாதங்கள் சிறையில் கழித்து வெளியில் வந்த குற்றவாளி ‘நான் செய்ததில் எந்த தவறும் இல்லை’ எனப் பத்திரிக்கையாளர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.