நாடாளுமன்றத்தில் புகைவீச்சு: மூளையாக செயல்பட்டவரின் அதிரும் வாக்குமூலம்
நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு பேர், புகைக் குப்பிகளை வீசிய சம்பவத்தில் மூளையாக இருந்து செயல்பட்ட லலித் மோகன் ஜா அளித்திருக்கும் வாக்குமூலம் வெளியாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மக்களவையில் இரு இளைஞா்கள் பாா்வையாளா் மாடத்திலிருந்து குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். அவா்களை எம்.பி.க்கள் பிடித்து பாதுகாவலா்களிடம் ஒப்படைத்தனா். அதுபோல, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியேயும் இருவா் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நீலம் தேவி, அமோல் ஷிண்டே, சாகா், மனோரஞ்சன் ஆகிய நால்வரையும் காவல்துறையினர் கைது செய்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் (ஐபிசி) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனா்.
பின்னா், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான லலித் ஜா புது தில்லியில் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முதலில், நாடாளுமன்ற வளாகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபடவே போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்ததாகக் கூறியுள்ளார்.
அதாவது லலித் மோகன் ஜா கூறியதாக வெளியான தகவலில், நானும், எனது கூட்டாளிகளும் நாடாளுமன்ற வளாகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தீக்குளிப்பில் ஈடுபட திட்டமிட்டோம். தீக்குளிக்கும்போது உடலில் தீத் தடுப்பு மருந்து தடவிக்கொண்டால் அதிக காயம் ஏற்படாது. ஆனால், அந்த தீத்தடுப்பு மருந்து கிடைப்பதில் பெரும் சிக்கல் இருந்ததால்தான் அந்த திட்டத்தை கைவிட்டோம் என்று கூறியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதில் ஈடுபட்ட அனைவரின் செல்போன்களையும் அழித்துவிட்டதாகவும் லலித் தெரிவித்துள்ளதாகவும், இவர்தான் இந்த சதித் திட்டத்தின் மூளையாக இருந்தவர் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மேலும், இவர் அளிக்கும் சில தகவல்களை காவல்துறையினரை திசைதிருப்பும் வகையில் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர் காவல்துறையினர்.
அதுமட்டுமல்லாமல், இவர் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்றும், அடிக்கடி தனது வாக்குமூலத்தை மாற்றிக்கொள்வதாகவும் காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.